ரோகித், தினேஷ் கார்த்திக் அதிரடி: இந்திய அணி அசத்தல் வெற்றி.

முதல் ‘டி-20’ போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் விளாச இந்திய அணி 68 ரன் வித்தியாசத்தில் ‘ஈஸியா’ வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. டிரினிடாட்டில் முதல் போட்டி நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அல்ஜாரி ஜோசப் அறிமுகமானார். கேப்டன் ரோகித் சர்மா, ரிஷாப் பன்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், இந்திய ‘லெவன்’ அணிக்கு திரும்பினர். ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் நிகோலஸ் பூரன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 44 ரன் சேர்த்த போது அகேல் ஹொசைன் பந்தில் சூர்யகுமார் (24) அவுட்டானார். ஸ்ரேயாஸ் (0) ஏமாற்றினார். ரிஷாப் பன்ட் (14) நிலைக்கவில்லை.

அல்ஜாரி ஜோசப் வீசிய 12வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த ரோகித் அரைசதம் கடந்தார். ஜோசப் ‘வேகத்தில்’ ஹர்திக் பாண்ட்யா (1), ரவிந்திர ஜடேஜா (16) வெளியேறினர். அபாரமாக ஆடிய ரோகித் 64 ரன்னில் (2 சிக்சர், 7 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

பின் இணைந்த தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், அஷ்வின் ஜோடி பொறுப்பாக விளையாடியது. ஹோல்டர் வீசிய 19வது ஓவரில் அஷ்வின் 2, கார்த்திக் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாச, 21 ரன் கிடைத்தன. தொடர்ந்து அசத்திய கார்த்திக், மெக்காய் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார்.

இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 190 ரன் எடுத்தது. கார்த்திக் (41), அஷ்வின் (13) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோசப் 2 விக்கெட் வீழ்த்தினார்.

சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் (15), ஷமர் புரூக்ஸ் (20) ஏமாற்றினர். ஜேசன் ஹோல்டர் ‘டக்-அவுட்’ ஆனார். அஷ்வின் ‘சுழலில்’ கேப்டன் பூரன் (18), ஷிம்ரன் ஹெட்மயர் (14) சிக்கினர். பிஷ்னோய் பந்தில் ராவ்மன் பாவெல் (11), ஒடியன் ஸ்மித் (0) அவுட்டாகினர். அகேல் ஹொசைன் (11) நிலைக்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 122 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. கீமோ பால் (19), அல்ஜாரி ஜோசப் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது போட்டி ஆக. 1ல் செயின்ட் கிட்சில் நடக்கவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.