ஆவின் பால் மீதான குற்றச்சாட்டுகள்: `அண்ணாமலை சொல்லும் கணக்கு உண்மையா?

அண்ணாமலை குற்றம்சாட்டிய அளவுக்கு இல்லாவிடினும் ஆவினில் முறைகேடுகள் நடப்பது உண்மைதான் என்கிறார்கள் பால் முகவர்கள்!

மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளத் துறைகளில் முக்கியமானது பால்வளத்துறை. பல்வேறு தனியார் பால் நிறுனங்கள் இருந்தபோதும் தமிழகத்தில் ஆவின் பாலுக்கு இருக்கும் மதிப்பு இன்னும் குறையவில்லை. எனினும், இத்துறையில் நடக்கும் நிகழ்வுகள் கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் வித்தியாசமாகவே இருக்கிறது.

இதற்கு முன்பாக ஆவினில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள், விவகாரங்கள் குறித்து பல கட்டுரைகள் ஜூ.வி-யில் வெளியாகியிருக்கின்றன. இந்தச் சூழலில், சமீபத்தில் ஆவின் பால் எடைக் குறைவாக இருப்பதாக ஒரு நாளிதழிலும், சமூக வலைதளங்களிலும் படத்துடன் செய்தி வெளியானது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

சமன்படுத்திய பால் (நீலம்), நிலைப்படுத்திய பால் (பச்சை), கொழுப்புச் சத்து உடைய பால் (ஆரஞ்சு), இருமுறை சமன்படுத்திய பால் (சிவப்பு) ஆகிய நான்கு வகையான ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில், நீலமும், பச்சையும்தான் வீடுகளில் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிக உறுப்பினர்கள் கொண்ட, திக்கான பால் பிரியர்கள் ஆரஞ்சு நிற பாலை வாங்குகிறார்கள். சிவப்பு நிறப் பால் கமர்ஷியல் தேவைக்கே பயன்படுத்தப்படுகிறது.

தற்போது செஸ் ஒலிம்பியாட் நடைபெற்றுவருவதால், அதனை விளம்பரப்படுத்தும் வகையில் ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் குறித்த வாசகங்களுடன் பால் வந்துகொண்டிருக்கிறது. அதில், ஆரஞ்சு நிற அரை லிட்டர் பாலை எடை மிஷினில் நிறுக்கையில் அளவு குறைந்து காட்டியது. தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட், அரசியலைத் தாண்டி இதுதான் இப்போதைய ஹாட் டாக்காக மாறியிருக்கிறது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை, `ஒரு நாளைக்கு 70 லட்சம் வரை அரை லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் தமிழகத்தில் விற்பனையாகின்றன. ஒரு பாக்கெட்டில் சுமார் 70 மில்லி குறைகிறது என்றால், கிட்டத்தட்ட ஒரு கவர் பாலுக்கு 3 ரூபாய் 8 காசுகள் குறைகிறது. கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 2 கோடியே 16 லட்சம் ரூபாய் அளவிற்கு மக்களின் பணம் ஏமாற்றப்படுகிறது.

சட்டத்துக்குப் புறம்பாகப் பெறப்பட்ட இந்தப் பணம் யாருக்குப் போய்ச்சேர்ந்தது? மக்களிடம் அதிகமாகப் பெறப்பட்ட பணத்தை உடனடியாக ஆவின் நிறுவனம் திருப்பித் தர வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அண்ணாமலை சொல்லும் கணக்கு உண்மையானதுதானா? என்பது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் க.ஆ.பொன்னுசாமியிடம் கேட்டோம். “அண்ணாமலை சொவது பொய். ஒரு பாக்கெட்டில் அப்படி அளவு குறைந்தது என்பதை ஒட்டுமொத்தமாக எல்லா பாக்கெட்டும் அப்படித்தான் இருக்கும் என்கிற யூகத்தில் கணக்குச் சொல்லியிருக்கிறார் அண்ணாமலை.

அந்தத் துறையில் இருக்கும் எங்களுக்குத்தான் அதன் உண்மைத்தன்மை தெரியும். எனினும், இந்த அளவு குறைந்த பால் விநியோகிக்கப்பட்டது உண்மைதான். காலாகாலத்துக்கும் இப்படியான முறைகேடுகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அளவு மட்டுமே வேறுபடும்.

மேல் மட்டம் வரையில் முறைகேடுகள் மூலம் கட்டிங் போய்க்கொண்டிருப்பதால், மேலிடத்திலிருந்து அதிகாரிகளுக்கு டார்கெட் கொடுத்துவிடுகிறார்கள். கொடுக்கப்பட்ட டார்கெட் தொகையைக் கொடுக்க அதிகாரி என்ன செய்வார்கள்? அவர்களுக்குக் கீழ் உள்ளவர்களை முறைகேடுகளுக்குத் தூண்டுகிறார்கள். அதன் அடுத்தக்கட்டமாகத்தான் இப்படியான அளவு குறைபாடு முறைகேடுகள் அரங்கேறுகின்றன.

பொதுமக்களில் யாரேனும் கண்டுபிடித்து வெளிப்படுத்தும்போது விவகாரம் பெரிதாகிறது. இல்லையென்றால், யாருக்குமே தெரியாமல் விவகாரம் அடங்கிவிடுகிறது. மொத்த விநியோகஸ்தர்களோ, பால் முகவர்களோ, கடைக்காரர்களோ, பொதுமக்களோ யாராலும் தினந்தோறும் எடை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதனால், இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.