தணிக்க வந்த டி.பி.யும் , எரிக்க வந்த ரணிலும் ….- உபுல் ஜோசப் பெர்னாண்டோ

‘எரியும் நெருப்பில் வைக்கோல் போட நான் வரவில்லை. தீயை அணைக்கவே வந்தேன்…’   இது டிங்கிரி பண்டா விஜேதுங்க அல்லது இலங்கையின் மூன்றாவது நிறைவேற்று ஜனாதிபதி டி.பி. ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஐ.தே.க.வின் தலைவர்களிடம் விஜேதுங்க ஆற்றிய உரை.

பிரேமதாச அரசாங்கத்தில் டி.பி.விஜேதுங்க , ரணசிங்க பிரேமதாச அரசில் பிரதமராகியிருந்தார். அவர் பிரதமர் பதவியிலிருந்து தற்காலிக ஜனாதிபதியானார்.

ரணசிங்க பிரேமதாசா கொல்லப்பட்ட போது ஜே.ஆர். இந்தியாவில் இருந்தார். பிரேமதாசா குண்டு வெடிப்பில்  கொல்லப்பட்டதை அறிந்ததும் ,  ஜே.ஆர். ,  டி.பி.யை  உடனடியாக ஜனாதிபதியாக  சத்தியப்பிரமாணம் செய்ய வைக்குமாறு  இந்தியாவில் இருந்து ஜனாதிபதியின் செயலாளர் கே.எச்.ஜே. விஜயதாசவுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்தியாவில் இருந்த ஜே.ஆர் , உடனடியாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரிடம் பேசி , இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை பெற்றுக் கொண்டார். அவர் அதைப் படித்துவிட்டு டி.பி.யை ஜனாதிபதியாக எப்படி நியமிப்பது என்பது குறித்து ஜனாதிபதி செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

ஐதேக அரசாங்கத்தில் உள்ள ஒருவரே , அரசாங்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக ஆக வேண்டும் என ஜே.ஆர். முடிவெடுத்தார்.

Swearing-in of Prime Minister Ranil Wickremesinghe on May 7, 1993 before President D.B. Wijetunga

இலங்கை இப்போது அரசியலில் எரிந்து கொண்டிருக்கிறது. அதை குளிர்ச்சியாக்க டிபிதான் சிறந்த ஆள்’

ஜே.ஆர் , யூ.என்.பி. அரசாங்கத் தலைவர்களுக்கு அவர் பரிந்துரைத்தார். பிரேமதாசவின் படுகொலையின் பின்னர் அரசு தரப்பிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போகும் நபர் , டி.பி. என பிரதான எதிர்க்கட்சிக்கும் தெரிய வந்தது.

DB, Wijethunge

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர், நாடாளுமன்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் பலமான கருத்தைக் கொண்டிருந்தாலும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவியான திருமதி ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா, டி.பி. போன்ற ஒரு அமைதியான நபரை இந்நேரத்தில் ஜனாதிபதியாக செயல்பட அனுமதிப்பதே சரி என தெரிவித்தார்.

1977 இல் யூ.என்.பி ஆட்சியில்,  டி.பி அமைதியான ஒரு நபராக இருந்ததால் , அவரை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் விரும்பினர். ஏனென்றால் அவர் அரசாங்கத்தின் சர்ச்சையில் சிக்காத ஒரு அப்பாவி மனிதராகவும் இருந்தார். பிரேமதாச அரசு , எதிர்க்கட்சி மீது கொண்ட குரோத மனப்பான்மையை டி.பி தணிப்பார் என ஶ்ரீமாவோ உட்பட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் நம்பினர். இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி டி.பி.யை போட்டியின்றி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க  அனுமதித்தது.

டி.பி. ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எதிர்கட்சியினருக்கு பிரச்சனைகளாக இருந்த அடிப்படை காரணிகளை அகற்றினார். பிரேமதாசவை அரசாங்கத்தில் செயலாளராக இருந்த சிரிசேன குரேவை முதலில் அவரது பதவியிலிருந்து நீக்கினார். சொத்தி உபாலி எனப்படும் சண்டியரை யூ.என்.பி. அரசியல் கட்சியிலிருந்தே அகற்றினார். அரசாங்கத்திலும் , ஐக்கிய தேசியக் கட்சியிலும் மௌனப் புரட்சியை ஏற்படுத்தினார். இதை சில ஊடகங்கள் டிபிக்கு சரியான பார்வை கிடைத்துள்ளது என எழுதின.

டி.பி. ஜனாதிபதியானது போல , மரணம் அல்லது இராஜினாமாவின் பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்கும் இரண்டாவது நபர் ரணில் விக்கிரமசிங்க ஆவார்.

அரசாங்கத்தில் சுயாதீனமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி , தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விமல்-கம்மன்பில ஆகியோர் இணைந்து சர்வ கட்சி அரசொன்றை கொண்டு வருவதற்கு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் ரணில் திடீரென நுழைந்து ஜனாதிபதியானார்.

ரணில் பிரதமராக பதவியேற்ற போது அனைவரும் அதை எதிர்த்தனர். ரணிலை பிரதமராக்கக் கூடாது என்பதில் மகாநாயக்க தேரர்களும் , கர்தினாலும் கடும் அபிப்பிராயம் கொண்டிருந்தனர். இதற்கெல்லாம் மேலாக ரணிலின் நியமனத்தைக் கண்டித்து மகிந்தவை பிரதமர் பதவியிலிருந்து விலகச் செய்த அரகலய போராட்டக்காரர்களும்  எதிர்த்தனர்.

கோட்டா,  சஜித்தை பிரதமராக்கி சர்வகட்சி ஆட்சியை அமைத்திருந்தால் ஜூலை 9 அன்று போராட்டம் ஒன்று நடந்திருக்காது. கோட்டா வீட்டுக்குப் போகவும்  வேண்டி வந்திருக்காது. அது நடந்திருந்தால், இப்போது நிதி உதவிகள் அல்லது ஐ.எம்.எஃப். மூலம், பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, நாட்டை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு வந்திருக்க  முடிந்திருக்கும்.

சஜித்தை பிரதமராக்கி அனைத்துக் கட்சி ஆட்சி ஒன்றை அமைக்கும் திட்டம் கோட்டாபயவுக்கும் ராஜபக்ச குடும்பத்துக்கும் பிடிக்கவில்லை. அதனால்தான் ரணிலை அவசர அவசரமாக அழைத்து வந்த கோட்டா , ரணிலை பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ரணில் பிரதமரான பிறகு போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. இதனால், கோட்டா நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. கோட்டா வெளியேறும் போது , ரணில் பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்திருக்க வேண்டும், ஆனால் பிரேமதாச கொல்லப்பட்ட போது ஜே.ஆர், டி.பியை ஜனாதிபதியாக்கியது போல கோட்டா , சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பதில் ஜனாதிபதியாக நியமிக்கலாம் என பலரும் நினைத்தனர்.

மஹிந்த யாப்பாவுக்கும் , டி.பி. விஜேதுங்கவுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. டி.பி. போன்று மஹிந்த யாபாவும் பெரும் சர்ச்சைக்குரியவர் அல்ல. டி.பி. போல தணிந்த சுபாவமுடையவர்.

அவர் பதில் ஜனாதிபதியாகி அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒரு பிரதமரைத் தேர்ந்தெடுத்து அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைத்திருந்தால், ஐ.எம்.எஃப் பிரச்சனை இன்று  சுமுகத்துக்கு வந்திருக்கும்.

காரணம் மகிந்த யாப்பாவின் தலைமையிலான அரசாங்கம் அமைந்திருந்தால் , அது போராட்டத்தை நசுக்கவோ, போராட்டத்தை பின்னுக்குத் தள்ளவோ ​​அல்லது அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தவோ முயன்றிருக்காது, மாறாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முயன்றிருக்கும் . அத்தோடு அந்த அரசாங்கம் ராஜபக்சவின் திருட்டுக்களை கண்டு பிடிக்க துரத்திக் கொண்டிருக்கும். அரகலய போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளில் இதுவும் ஒன்று.

இன்று மஹிந்த யாப்பா ஜனாதிபதியும் ஆகவில்லை. அனைத்து கட்சி பிரதமரோ அல்லது அனைத்து கட்சி அரசாங்கமோ தேர்ந்தெடுக்கப்படவும் இல்லை.

ராஜபக்சக்கள் ரணிலை ஜனாதிபதியாக்கி, தினேஷை பிரதமராக்கி நாட்டுக்கு மாத்திரமன்றி உலகத்திற்கே தமது பலத்தை காட்டினர்.

அன்று டி.பி. ஜனாதிபதியாகி , கடுமையான பிரேமதாச அரசியல் அமைப்பை மாற்றினார். இன்று ரணில் ஜனாதிபதியாகி , ராஜபக்ச அரசியலை , கோட்டாவை விட கடுமையோடு  சிறப்பாக நடத்தி வருகிறார்.

ராஜபக்ச தனது அதிகாரத்தை பலப்படுத்தினார். இப்போது செய்வதற்கு ஒன்றுமில்லை. அவர்களின் பிரதிநிதியான ரணிலுடன் இணைந்து இந்தப் பணியைத் தொடருவோம்…’

மொட்டின் ஆதரவாளர்கள் ஐ.எம்.எஃப். ஆதரவு கிடைக்கும் என நம்புகிறார்கள்.

IMF கடன் வழங்குவதற்கான முக்கிய நிபந்தனை அரசியல் ஸ்திரத்தன்மை. அதாவது ஐ.எம்.எஃப். சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த அந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் அரசாங்கம்  ஒன்று அவர்களுக்கு வேண்டும் .

நாட்டில் ஒரு பொதுப் போராட்டம் நடந்து கொண்டிருந்தால் அதை ஒடுக்கி, சமூக ஊடகங்களை அடக்கி , அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கியதாக காட்டும் ஒரு அரசை ,  IMF எதிர்பார்க்கவில்லை.

அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போது இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக வேண்டும் என IMF தெரிவித்தது.

அரசியல் சீர்திருத்தங்கள் என்பது அடிப்பது, வெட்டுவது, கொல்வது என்று அர்த்தமல்ல, மாறாக நாட்டை ஜனநாயகப்படுத்துவது என்பதாகும்.

சமீபத்தில், அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவத்துடன் வீட்டிற்கு செல்ல நேரிட்டது. ஐ.எம்.எப்பிடம் அவரது அரசும்  கடன் கேட்டிருந்து , அது சாத்தியமாகாத நிலையிலேயே அவர் பதவி துறக்க வேண்டியதாயிற்று.

ராஜபக்சவைப் போன்று செல்வாக்கற்ற தலைவராக அவர் வீட்டுக்குச் செல்லவில்லை. ஆனால், ராணுவத்தை வைத்துக் கொண்டு நடத்திய அவரது இராணுவ ஆட்சிக்கு IMF கடன் கொடுக்க மறுத்தது.

ராஜபக்சக்கள் , ரணிலை ஜனாதிபதியாக்கி சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பெறும் காலத்தை  இன்னும் நீட்டி இழுத்துவிட்டார்கள்.

அதாவது டிசம்பரில் தருவதாக சொல்லப்பட்ட IMF பணம் மேலும் கால நீடிப்பாக இழுபடும்.

கடந்த 20 ஜூலையில் இலங்கை பாராளுமன்றத்தில் டி.பி.விஜேதுங்கவை போல ஒருவரை ஜனாதிபதியாக்கியிருந்தால் ,  இலங்கை தப்பி பிழைத்திருக்கும் ……

உபுல் ஜோசப் பெர்னாண்டோ
தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.