சாவுகளுக்கிடையே தொடரும் போர் : சண் தவராஜா

மிக விரைவில் முடியக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட உக்ரைன் போர் 6 மாதங்களையும் கடந்து தொடர்கிறது. இரு தரப்பிலும் ஆயிரக் கணக்கான படையினர் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. சற்றொப்ப 12 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 5 மில்லியன் வரையானோர் தங்கள் சொந்த நாட்டைவிட்டு வெளியேறி அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். மீதி 7 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வேறிடங்களில் தங்கி உள்ளனர். இது தவிர ஐயாயிரத்துக்கும் அதிகமான பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் நாட்டின் எல்லைக்குள்ளேயே பெரும்பாலும் போர் நடைபெற்றாலும், ஓரிரு வேளைகளில் ரஸ்ய மண்ணிலும் தாக்குதல்கள் சில நிகழ்வதை அவதானிக்க முடிகின்றது. வகை தொகையின்றி உக்ரைன் அரசாங்கத்துக்கு வாரி இறைக்கப்படும் படைத்துறை தளபாடங்களின் பரீட்சைக் களமாக தற்போதைய உக்ரைன் திகழ்கின்றது. ரஸ்ய மண்ணில் நிகழ்கின்ற ஓரிரு தாக்குதல்களும் கூட இதுபோன்ற பரீட்சார்த்த முயற்சியாக இருக்கக் கூடும்.

‘விசேட நடவடிக்கை’ என்ற பெயரிலேயே ரஸ்யப் படை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்தப் போரில் ரஸ்யப் படைகளுக்கு ஆதரவாக செச்னிய மற்றும் சிரியப் படையினர் களமிறங்கி உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அது மாத்திரமன்றி ரஸ்யாவில் செயற்படும் தனியார் பாதுகாப்பு நிறுவனமான ‘வக்னர் குழு’வினரும் களத்தில் உள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மறுபுறம், உக்ரைன் படையினருக்கு ஆதரவாக மேற்குலகின் பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த படையினர், முன்னாள் படையினர், தொண்டர்கள் களத்தில் உள்ளனர். உக்ரைனின் அயல் நாடுகளான முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் நட்பு நாடுகளின் படையினரும் கூடக் களத்தில் உள்ளனர். உத்தியோகப் பற்றற்ற முறையிலேயே இவர்கள் களத்தில் செயற்படுகின்ற போதிலும் குறித்த நாடுகளின் மறைமுக ஆசீர்வாதம் இவர்களுக்கு உள்ளது என்பதை மறைத்து விடுவதற்கில்லை.

களத்தில் போரிடும் வெளிநாட்டுப் பிரஜைகளைப் புறந் தள்ளிப் பார்க்கையில் இரண்டு நாட்டுப் படைகளுக்கு இடையிலான போராகப் பார்க்கப்பட்டாலும், மேற்குலகில் இருந்தும், நேட்டோ இராணுவக் கட்டமைப்பில் இருந்தும் உக்ரைனுக்குக் கிடைத்துவரும் படைத்துறை உதவிகள் பிரமிக்கச் செய்கின்றன. மறுபுறம், இந்தப் போரானது ரஸ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலேயே உண்மையில் நடைபெற்று வருகின்றது என்ற நோக்கர்களின் கருத்து மிகை மதிப்பீடு அல்ல என்பதை உறுதி செய்வதாகவும் உள்ளது.

உக்ரைனில் நடைபெறும் போரின் தாக்கம் உலகம் முழுவதிலும் உணரப் படுகின்றது. உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள்களின் விலையேற்றம் என்பவை காரணமாக அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. பொருளாதாரத் தடைகள் காரணமாக ரஸ்ய எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் அச்சமூட்டுவதாக உள்ளன. அடுத்துவரும் பனிக் காலத்தை ஐரோப்பா எவ்வாறு சமாளிக்கப் போகின்றது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

உலக உணவு உற்பத்தியில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் இரு நாடுகளும் போரில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காணும் நோக்கில் ஐ.நா. சபையும் துருக்கியும் இணைந்து ரஸ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுக்களின் முடிவில் உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ள போதிலும் அது நடைமுறைக்கு வருமா என்ற ஐயம் தொடர்கின்றது. உக்ரைன் தரப்பில் முடிவுகள் எட்டப்பட்டாலும் அவற்றை நடைமுறைப்படுத்தும் இடத்தில் வேறு சக்திகள் உள்ளன என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், ஏதாவது சாக்குப் போக்கு கூறி இந்த உடன்பாட்டில் இருந்து உக்ரைன் வெளியேறக் கூடும் என்ற எதிர்பார்ப்புகள் இல்லாமல் இல்லை.

மறுபுறம், உக்ரைன் தரப்பில் இருந்து யுத்த பேரிகை வெகு உற்சாகத்துடன் முழங்கப்படுவதைப் பார்க்க முடிகின்றது. போர்க் களத்தில் உக்ரைன் தரப்புக்கு இதுவரை பாரிய வெற்றி எதுவும் கிட்டவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், பல பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை நன்கொடையாகப் பெற்றுள்ள உக்ரைன் அடுத்துவரும் நாட்களில் ரஸ்யப் படைகளுக்கு எதிரான ஒரு தாக்குதலை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ‘கோடை காலப் படை நடவடிக்கை’ என்ற பெயரிலான இந்தத் தாக்குதல் அடுத்த மூன்று வாரங்களில் ஆரம்பமாகலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. தற்போது ரஸ்யப் படைகள் வசம் உள்ள அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட உள்ளன.

கோடை காலத்துக்கு முடிவதற்கு இடையில் உக்ரைன் தரப்பில் வெற்றி எதுவும் எட்டப்படாவிடில், எதிர்வரும் பனிக் காலத்தில் ரஸ்யா மேலதிக வெற்றிகளைப் பெறும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க படைத்துறை வல்லுநர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்துவரும் ஓரிரு மாதங்கள் திர்மானகரமாக அமையலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

உக்ரைன் தரப்பில் மேற்கொள்ளப்படவுள்ள தாக்குதல்கள் வெற்றியளிக்குமா? ரஸ்யப் படைகள் உக்ரைன் மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஆனால், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற இத்தகைய அணுகுமுறையால் யாருக்கு இலாபம் எனச் சிந்திக்க வேண்டும். உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலமே இறுதித் தீர்வு காணப்பட முடியும் என்பதில் ரஸ்ய மற்றும் உக்ரைன் தலைமைகள் திடமாக உள்ளதாகவே புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால், பலவீனமான நிலையில் இருந்து கொண்டு பேச்சுவார்த்தை மேசையில் அமர்வதற்கு உக்ரைன் விரும்பவில்லை. உக்ரைன் மட்டுமன்றி உக்ரைனை ஆதரிக்கும் தரப்புகளும் விரும்பவில்லை.
இத்தகைய பின்னணியில், போர் மேலும் தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகம் தென்படுகின்றன என்பதுவே கசப்பான உண்மை.

இந்தப் போரின் தாக்கத்தை உக்ரைன் மக்கள் மாத்திரமன்றி உலகமெலாம் வாழும் அனைத்து மக்களும் மேலும் கடுமையாக உணரப் போகின்றோம் என்பதுவும் உண்மையிலும் உண்மை.

Leave A Reply

Your email address will not be published.