கிளிநொச்சியில் இ.போ.ச. சேவையினர் இன்று பணிப்புறக்கணிப்பு!

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சிச் சாலையினர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் 6பேர் கொண்ட குழுவொன்று போக்குவரத்துச் சபையினர் மீது நேற்று நடத்திய தாக்குதலைக் கண்டித்தே இந்தப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் இதேபோன்று 4 வெவ்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், பொலிஸார் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்தினாலே தொடர்ந்து சேவைகளை முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தை அண்மித்த பகுதியில் 6 பேர் கொண்ட குழுவினர் இ.போ.ச. பேருந்தை மறித்து சாரதி மற்றும் நடத்துநரை நேற்றுத் தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் காயமடைந்துள்ளனர். தாக்குதல் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 3 பேரையும் கைது செய்வதன் ஊடாகவே எமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். அவர்கள் கைது செய்யப்படும் வரையில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என்றும் கிளிநொச்சி இ.போ.ச.வினர் குறிப்பிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.