அமெரிக்க ஜனநாயகக் காவலனது முகமூடி : சண் தவராஜா

ஒரு மாபெரும் மோதலுக்கு வித்திடக் கூடிய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க சபாநாயகரின் தாய்வான் விஜயம் நடைபெற்றிருக்கின்றது.

நான்சி பெலோசியின் விஜயம் தொடர்பில் முன்கூட்டியே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் சீனத் தரப்பில் இருந்து அதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிடப் பட்டிருந்தது.

அதேவேளை, இத்தகைய எதிர்ப்புக்கு மத்தியில் பெலோசியின் விஜயம் ரத்து செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்புகளும் இருந்ததை மறைப்பதற்கில்லை. தவிர, அவரின் உத்தேச வருகையை ஒட்டி அமெரிக்கக் கடற்படை தனது தாக்குதல் கப்பல்களை தாய்வான் பகுதிக்கு அனுப்பி வைத்த அதேவேளை, சீனாவும் தனது கடற்படைக் கப்பல்களை அந்தப் பிராந்தியத்தில் நிலைகொள்ளச் செய்திருந்தது.

இருந்தும் பெலோசி தாய்வான் மண்ணில் கால்பதித்து உள்ளார். மிகப் பாரிய ஒரு இராணுவ மோதல் நிகழ்வதற்கான வாய்ப்பு உள்ள சூழலில், அதைப் பற்றிக் கவலை கொள்ளாது தாய்வான் மண்ணில் அவர் கால் பதித்திருப்பதன் முக்கியத்துவம்தான் யாது?

தனது தாய்வான் விஜயம் தொடர்பில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் ‘ஆசியருக்குக் கடிதம்’ பகுதியில் பெலோசி எழுதியுள்ள விடயங்கள் இவை. “தாய்வானையும், ஒட்டு மொத்தத்தில் ஜனநாயகத்தையும் சீனப் பொதுவுடமைக் கட்சி அச்சுறுத்தும் போது நாம் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது. தாய்வான் விஜயத்தின் மூலம் ஜனநாயத்தின் மீதான பற்றுறுதியை நாம் கௌரவப் படுத்தியுள்ளோம். தாய்வான் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக நாடுகளின் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்பதை நாம் உறுதிப் படுத்தியுள்ளோம். எதேச்சாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையிலான தெரிவை தற்போது உலகம் எதிர்கொண்டு உள்ளது. திட்மிடப்பட்ட, சட்டவிரோதமான போர் ஒன்றை ரஸ்யா உக்ரைனில் தொடுத்து குழந்தைகள் உட்பட அப்பாவி மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று வரும் நிலையில், அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் எதேச்சாதிகாரத்துக்கு இடம் கொடுப்பதில்லை என்ற தெளிவான செய்தியை வழங்க வேண்டியுள்ளது.”

மேலே கூறப்பட்டுள்ள விடயங்கள் அமெரிக்கத் தரப்பிலிருந்து அடிக்கடி கூறப்படுகின்ற விடயங்களே. புதிய ‘சரக்கு’ எதுவும் இந்தப் பதிவில் இருப்பதாகத் தெரியவில்லை. அது மாத்திரமன்றி, தற்போதைய நிலையில் தாய்வான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் எதனையும் சீனா கொண்டிருப்பதாகவும் வெளிப்படையாகத் தெரியவில்லை. இருந்தும் அமெரிக்கா சன்னதம் கொண்டு நிற்பதன் காரணம் என்ன என்பதுதான் புரியாத புதிர்.

உக்ரைன் மீதான ரஸ்யப் படையெடுப்பு தொடர்பில், போருக்கு முந்திய காலகட்டத்தில் இதுபோன்ற அறிக்கைகளே அமெரிக்காவிடம் இருந்தும் மேற்குலகத் தரப்பிடம் இருந்தும் வெளியாகி இருந்ததை நாம் மறந்திருக்க முடியாது.

ஆனால், ரஸ்யப் படையெடுப்பு ஆரம்பமான வேளை ஆயுத தளபாட உதவிகளையும், ஆலோசனை வழிகாட்டுதல்களையும் தவிர வேறு வகையில் எதனையும் செய்துவிட முடியாத சூழலே இன்றுவரை உக்ரைனில் உள்ளது. தாய்வானின் சூழலும் கிட்டத்தட்ட இது போன்றதே.

அமெரிக்கா எச்சரிப்பது போன்று, அல்லது அமெரிக்கா திட்டமிட்டுள்ளது போன்று தாய்வான் மீது சீனா படை நடவடிக்கைகளை மேற்கொண்டால் அமெரிக்காவாலோ அன்றி மேற்குலகினாலோ உக்ரைனில் நடந்து கொள்வது போன்றுகூட நடந்துகொள்ள முடியுமா என்பது கேள்விக் குறியே. 

ஏனெனில், உக்ரைனைப் பொறுத்தவரை அந்த நாட்டுக்கு ஆயுத தளபாடங்களை வழங்குவதற்கான தரைத் தொடர்புகள் உள்ளன. தாய்வானைப் பெறுத்தவரை அதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை. போர்ச் சூழல் ஒன்று உருவாகுமானால் கடல்வழித் தொடர்புகள் எப்போது வேண்டுமானாலும் துண்டிக்ககப்படும் வாய்ப்பு உள்ளது.

கடந்த 3 பத்தாண்டுகளில் உலகின் பல நாடுகளிலும் அமெரிக்கா மேற்கொண்ட படை நடவடிக்கைகள் ஜனநாயத்தைப் பேணுதல், மனித உரிமைகளை மதித்தல் என்ற சொல்லாடல்களின் பின்னணியிலேயே நிகழ்ந்துள்ளன. தற்போதைய உலகின் மிக மோசமான மனித உரிமை மீறல் வரலாற்றைக் கொண்ட நாடாக அமெரிக்காவே உள்ளது என்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல.

உலகின் வல்லாண்மை மிகுந்த சக்தியாக அமெரிக்காவே விளங்க வேண்டும் என்ற அமெரிக்க ஆட்சியாளர்களதும், அரச இயந்திரத்தினதும் கொள்கை காரணமாக அமெரிக்கா உலகம் முழுவதும் மேற்கொண்டுவரும் அடாவடித் தனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அது மாத்திரமன்றி அமெரிக்காவைத் தளமாகக் கொண்டுள்ள உலகின் பகாசுர வணிக நிறுவனங்களின் வணிக நோக்கங்களை நிறைவேற்றும் கடமையும் அமெரிக்க அரசுத் தலைமைக்கு உள்ளது. இதில் ஆயுத வணிகர்களின் பங்கு மிக முக்கியமானது. உலகின் எந்த மூலையில் ஒரு ஆயுத மோதல் உருவாகினாலும் அதன் பலன் நிச்சயம் இந்த ஆயுத வணிகர்களைக் கிட்டவே செய்யும் என்பதே யதார்த்தம்.

சீனாவின் அதீத எச்சரிக்கைகளையும் மீறி பெலோசியின் தாய்வான் விஜயம் நிகழ்ந்திருக்கின்றது. தனது எச்சரிக்கையை அலட்சியம் செய்த பெலோசியின் விஜயத்துக்கு எதிர்வினையாக சீனத் தரப்பில் பல படை ஒத்திகைகள் தாய்வானுக்கு மிக அருகில் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஒத்திகை நடவடிக்கைகளின் போது நிஜ வெடிபொருட்களையே சீனா பயன்படுத்தியுள்ளது. அமெரிக்கக் கடற்படையின் பிரசன்னம் அதிகமாக இருக்கும் நிலையில் – ஒரு சிறு பொறியில் இருந்தே ஆயுதமோதல் வெடிக்கலாம் என்ற நிலை இருந்தபோதும் கூட – சீனா எதனையும் எதிர்கொள்ளும் துணிச்சலுடன் இந்த படை ஒத்திகைகளை மேற்கொண்டுள்ளமை நோக்கத்தக்கது.

தாய்வானின் ஜனநாயகப் பண்பு மற்றும் மனித உரிமைகள் நிலைமை என்பவற்றில் அமெரிக்கா உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்பது அவசியமானது.

தற்போதைய தாய்வான் அரசாங்கம் 1949ஆம் ஆண்டிலேயே தோற்றம் பெற்றது. நவ சீனாவின் தந்தை மாவோ சேதுங் தலைமையிலான மக்கள் விடுதலை இராணுவத்துடன் இணைந்து ஆரம்பத்தில் யப்பானிய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராகப் போராடிய சியாங்கை சேக் தலைமையிலான கோமிங் தாங் படையினர் ஒரு கட்டத்தில் கம்யூனிச எதிர்ப்பு என்ற கொள்கையின் கீழ் அமெரிக்காவின் துணையோடு மக்கள் விடுதலை இராணுவத்தை எதிர்க்கத் தொடங்கினர்.

1949இல் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் சீனாவை விட்டு வெளியேறிய சியாங்கை சேக் – அமெரிக்காவின் உதவியுடன் – தாய்வானில் தனது இராச்சியத்தை நிறுவிக் கொண்டார்.

1949 முதல் 1987 வரை அந்த நாடு இராணுவ ஆட்சியின் கீழேயே இருந்து வந்தது. இது உலக சாதனை. இந்தக் காலகட்டத்தில் அது அமெரிக்காவின் முழு ஆசீர்வாதத்துடனேயே நடந்தது என்பதை மறந்துவிட முடியாது. சற்றொப்ப 40 வருடங்கள் இராணுவ ஆட்சி நடைபெற்ற ஒரு நாட்டின் மனித உரிமை நிலவரம் என்னவாக இருந்திருக்கும் என்பதை ஊகிப்பதற்கு விசேட அறிவு ஒன்றும் தேவையில்லை. அந்தக் காலகட்டத்தில் தாய்வானின் மனித உரிமை நிலவரம் பற்றி அமெரிக்காவும் வாய் திறக்கவில்லை. பெலோசி போன்றவர்களும் மல்லுக் கட்டிக் கொண்டு ‘ஜனநாயகத்தைக் காக்க’ விஜயம் மேற்கொள்ளவும் இல்லை.

மாவோ தலைமையில் விடுதலை பெற்ற சீன மக்கள் குடியரசை ஒரு நாடாக அமெரிக்கா அங்கீகரித்தது 1979ஆம் ஆண்டிலேயே. அதுவரை தாய்வானையே சீன அரசாங்கமாக அமெரிக்கா கருதிச் செயற்பட்டு வந்தது.

அன்றைய சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான தனது செயற்பாடுகளுக்கு ஏதுவாக 1979இல் சீனாவுடன் நட்பு பாராட்ட ஆரம்பித்தது அமெரிக்கா. அப்போது சீனத் தரப்பில் முன்வைக்கப்பட்ட நிபந்தனையே ஒரே சீனா என்ற கோட்பாடு. இதனை அமெரிக்கா கொள்கையளவில் ஏற்றுக் கொண்டாலும், நடைமுறையில் தாய்வானுடனான உறவை அமெரிக்கா தொடரவே செய்கின்றது.

1997ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க சபாநாயகர் Newt Gingrich தாய்வானுக்கு விஜயம் செய்திருந்தார். அதுவே அமெரிக்க அரச தரப்பில் ஒரு உயர்ந்த இடத்திலுள்ள அரசியல்வாதியின் முதல் விஜயமாக அமைந்திருந்தது.

25 வருடங்களின் பின்னர் அதுபோன்ற ஒரு விஜயம் மீளவும் நிகழ்ந்திருக்கின்றது. அன்றிருந்த சீனா இன்று இல்லை. அமெரிக்காவும் அன்று இருந்த வலுவான நிலையில் இன்று இல்லை. இது அமெரிக்க ஆளும் வர்க்கத்தினருக்குப் புரிகிறதோ இல்லையோ சாதாரண மக்களுக்குத் தெளிவாகவே புரியும்.

பெலோசியின் உத்தேச விஜயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் பின்வருமாறு கூறியிருந்தார்.“அமெரிக்கா நெருப்போடு விளையாடுகிறது. நெருப்பில் கை வைத்தால் அது சுடவே செய்யும்.” பெலோசியின் தாய்வான் விஜயத்தோடு அமெரிக்கா நெருப்பில் கை வைத்திருக்கிறது.

அது எவ்வாறு சுடப் போகின்றது என்பதை வரும் நாட்களில் காணலாம்.

Leave A Reply

Your email address will not be published.