ராஜபக்சவினரது குப்பைகளை காவும் அனைத்து கட்சி குப்பை வண்டி! : உபுல் ஜோசப் பெர்னாண்டோ

சிந்திக்கக் கூடிய திறமையான அரசியல்வாதிகள் அரசாங்கத்திலும் இருக்கிறார்கள். எதிர்க்கட்சியிலும் இருக்கிறார்கள். இது ஒன்றும் சீட்டாட்டம் அல்ல. இது நாட்டை சீர் செய்யும் முயற்சி…’

இவை சர்வ கட்சி ஆட்சி அமைப்பது தொடர்பாக கிரீஸ் நாட்டு நிறைவேற்றுப் பிரதமர் , நீதி அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் நேருக்கு நேர் சந்திப்பதற்கு முன், கிரீஸ் நாட்டின் ஊடகங்களில் வெளியான கருத்துகள் இவை…….

‘நாங்கள் இந்த அனைத்துக் கட்சி அரசியல் ஒப்பந்தத்தில் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. பசி ஏற்படும் போது மக்கள் போராடுவது இயல்பு. அவர்களுக்கு மாற்றம் ஒன்று தேவை …’

பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப்புக்கு முன்னர் கிரேக்க தாய் ஒருவர் ஊடகங்களிடம் கூறியது இதுதான்.

‘அனைத்து கட்சி ஆட்சியின் முதல் நிபந்தனை நீங்கள் வெளியேற வேண்டும்…’

கிரேக்க நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் சொன்னது அவ்வளவுதான்.

‘நான் மிகப் பெரும் மக்கள் ஆணையுடன் வந்திருக்கிறேன். அனைத்துக் கட்சி ஆட்சியில் இணையுங்கள். பிரதமர் பதவிக்கு இணையான ஒரு பதவியை தருகிறேன் …’
எதிர்க்கட்சித் தலைவரிடம்  கிரேக்க நாட்டு  பிரதமர் முன்வைத்த யோசனை இதுவாகும்.

உங்கள் கீழ் அனைத்துக் கட்சி ஆட்சியில் இணைய முடியாது. கட்சி சார்பற்ற ஒரு பிரதமரை நியமியுங்கள். நாங்கள் இருவரும் அவருக்கு கீழ் உள்ள அமைச்சு பதவிகளை ஏற்று, கிரீஸ் நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க IMFயை பெற்றுக் கொள்வோம். அதன் பின் தேர்தல் ஒன்றுக்கு போகலாம்…’

எதிர்க்கட்சித் தலைவரினால் முன்வைக்கப்பட்ட யோசனை இதுவாகும்.

எதிர்க்கட்சித் தலைவரின் யோசனை சரியானது என்பதை ஆட்சியிலிருந்த பிரதமரின்  அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டனர்.

“உங்களை முதன்மை படுத்தாமல் , நாட்டை முதன்மை படுத்துங்கள்…”

இதுதான் அனைவரும் இணைந்து பிரதமருக்கு கொடுத்த அழுத்தம்.

அன்றைய கிரீஸைப் போல இன்றைய இலங்கையும் ஒரு திவாலான நாடாகும்.

ஒரு கட்சி சார்பற்ற பிரதமரின் கீழ் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைத்ததன் மூலம் கிரீஸ் நாடு திவால்  நிலையிலிருந்து மீட்கப்பட்டது.

“உங்களை முதன்மை படுத்தாமல் , நாட்டை முதன்மை படுத்துங்கள்…”

இன்று சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்போம் என்று பேசும் எவரும், இதை ரணிலுக்கு சொல்ல முன்வர மாட்டார்களா ?

அந்தக் கதையை ரணிலுக்கு உணரச் சொன்னவர் சரத் பொன்சேகா மட்டுமேயாகும்.

“தேசியப் பட்டியல் வழியாக வந்து மொட்டின் 134 வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகி, பிரதமரையும் நியமித்துக் கொண்ட ஒருவர் , சர்வகட்சி அரசாங்கங்களை அமைக்க வாருங்கள் என்று கூறுகிறார்…”

இதுதான் உண்மைக் கதை.

மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிதான்,  ரணில் .

பிரதமர் தினேஷ் ராஜபக்சவின் ஊழியர்.

ஜனாதிபதி அல்லது பிரதமரின் கீழ் அமைக்கப்படும் அரசாங்கம் அனைத்துக் கட்சி ஆட்சியாக ஒரு போதும் இருக்க முடியாது. அது ஒரு தனிக் கட்சியின் ஆட்சி.

தனிக் கட்சி ஆட்சியா…?

இது ஒரு தனிக் கட்சி ஆட்சியும் அல்ல. அப்படியானால் …..?

இது ராஜபக்சவின் பாவங்களை சுமந்து செல்லும் அனைத்து கட்சிகளின் குப்பை வண்டியாகும்.

மாநகர சபையின் குப்பை வண்டி , மக்களின் குப்பைகளை சுமந்து  செல்வது  போன்று இந்த சர்வகட்சி வண்டியும் ,  ராஜபக்சவினரது குப்பைகளை  சுமந்து செல்ல வருகின்றது.

ரணில் ஜனாதிபதியாவதற்கு முன்னர் இந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி , ஜேவீபீ மாத்திரமன்றி, ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொண்டிருந்த ஐ.தே.க.வின் ரணிலும், இந்த பொருளாதார நெருக்கடியை ராஜபக்சவினரே உருவாக்கினர் என்று கூறினர்.

இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே பொறுப்பு கூற வேண்டும் என்றனர்.

ராஜபக்சவினர் திருடிய பணத்தை மீட்பதற்காகவே மக்கள் , அரகலய போராட்டத்தை ஆரம்பித்தனர்.

ராஜபக்சேக்கள் கொள்ளையடித்த பணத்தைக் கண்டுபிடிப்பதற்காக , அனைத்துக் கட்சிகளைக் கொண்ட அரசொன்றை உருவாக்கி சம்பந்தப்பட்டோரை தண்டிக்க வேண்டும் என போராட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டது.

ஜனாதிபதி பதவியையும் , பிரதமர் பதவியையும் விட்டுக்கொடுக்க ராஜபக்சக்கள் அஞ்சவில்லையென்றாலும், அவர்கள் சிறைக்குச் செல்வதற்கு அஞ்சினார்கள்.

உடனடியாக ரணிலை ஜனாதிபதியாக்கி, தினேஷை பிரதமராக்கியது சர்வ கட்சி ஆட்சி முறையை ஆரம்பத்திலேயே  சிதைப்பதற்காகவேயாகும்.

இப்போது ரணில் ஜனாதிபதியாகவும், தினேஷ் பிரதமராகவும் இருந்து கொண்டு , பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் ராஜபக்ஷக்கள் அல்ல, போராட்டத் தலைவர்களான முதலிகே, பெத்தும் கெர்னர், ரட்டா ஆகியோர் என்பது போல அவர்களை கைது செய்து வருகிறார்கள்.

ஜனாதிபதியின் கொடியை போராட்டக்காரர்கள் திருடியதால் நாடு திவாலானது போலவும் , போராட்டக்காரர்கள் ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்ததால் நாடு அழிந்தது போலவும் ,  ஜனாதிபதியின் பியர் கிளாஸ் திருடப்பட்டதால் கஜானா காலியானது என்பது போலவும் நடந்து கொள்கிறார்கள்.

‘அப்படியானால் ராஜபக்சவினர்…?’

ராஜபக்சக்கள் திருடவுமில்லை. நாட்டை திவாலாக்கவுமில்லை.

‘அப்படியானால் ராஜபக்சேவின் அழுக்குகளை கழுவுவதற்கா எதிர்க்கட்சிகளில் உள்ள சிலர் சர்வகட்சி ஆட்சி வேண்டும் என்கிறார்கள்…?’

இலங்கையின் தேசிய அரசாங்கங்களும், சர்வகட்சி அரசாங்கங்களும் , ஆளும் கட்சியைப் பலப்படுத்தவும் , எதிர்க்கட்சியைப் பலவீனப்படுத்தவுமே எப்போதும் செயல்பட்டுள்ளன.

1998 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து,  அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்காக தேசிய அரசாங்கத்தை அமைப்போம் என கூறினார்.

அவர் பேசி அதிக நேரம் எடுக்கவில்லை. ஐ.தே.க.வின் விஜயபால மெண்டிஸ், நந்தா மேத்யூ மற்றும் பலர் சந்திரிகாவின் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவிகளை ஏற்றனர்.

சந்திரிகா மீண்டும் , இனவாத பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பொதியை கொண்டு வர தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்போம் என 2000 ஆம் ஆண்டு கூறினார்.

அப்போதும் ரொனி டி மெல், மெர்வின் சில்வா, சரத் கோங்கஹகே மற்றும் பலர் சந்திரிகாவின் அரசாங்கத்தில் இணைந்தனர்.

2002ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில், வடக்கில் சமாதானத்தை ஏற்படுத்த தேசிய அரசாங்கத்தை அமைப்போம் என்றார்.

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே , ரணிலுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதை அறிந்த சந்திரிகா , பிரதமராக இருந்த ரணிலின் அரசை கலைத்தார்.

2006ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் வெளிநாடு செல்லும் வரை காத்திருந்த மஹிந்த , ஐக்கிய தேசியக் கட்சி துணைத் தலைவராக இருந்த கருவுக்குக் ஒரு கடிதம் எழுதி, இனவாதப் பிரச்சனையைத் தீர்க்க தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

அடுத்த கணமே கரு மற்றும் ஐதேகவிலிருந்த 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் , மகிந்த அரசில் இணைந்து அமைச்சர்களானார்கள்.

2015 ஆம் ஆண்டு மைத்திரிபால ஜனாதிபதியாக பதவியேற்ற பின் தேசிய அரசொன்றை அமைக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு விடுத்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்த குழுவொன்று ஓடோடிச் வந்து ,  மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் அமைச்சர்களானார்கள்.

‘அதனால் இந்த தேசிய அரசாங்கங்களால் நாட்டுக்கு என்ன லாபம் உண்டானது…?’

இதன் பலன் நாட்டுக்கு அல்ல, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அமைச்சர்களாக வீணி வடித்துக் கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கேயாகும்.

தேசிய – சர்வ கட்சி  அரசாங்கங்களின் இறுதி விளைவு , ஜனாதிபதிகளும் அரசாங்கமும் பலமாகி , எதிர்க்கட்சியை பலவீனமாக்கி , ஆட்சியாளர்களாக இருக்கும் ஜனாதிபதிகளும் அரசாங்கமும் பலமாவதுதான்.

அதனால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். மக்கள் பிரச்சனைகளுக்காக எதிர்த்து பேச எதிர்க் கட்சியில் கூட எவரும் இருக்கப் போவதில்லை.

‘ரணிலின் சர்வகட்சி அரசும் அப்படியாகுமா…?’

ரணிலின் சர்வகட்சி அரசும் அதையே விரும்புகிறது.

மொட்டுக்கும் அதே தேவைதான் உள்ளது.

சர்வகட்சி அரசாங்கங்கள் வேண்டாம் என்று தினேஷை , ரணில் பிரதமராக்கியதால் , நாட்டை எவ்வாறு மீட்பது என்பதை அவர்கள்தான் செய்து காட்ட வேண்டும்.

எதிர்க்கட்சியில் இருக்கும் எவரேனும் சர்வகட்சி ஆட்சியை விரும்பி , ரணில்-தினேஷ்-ராஜபக்ஷ கூட்டு அரசில் இணைந்தால் , அவர்கள் அமைச்சு பதவி எனும் எலும்பு துண்டுகளை நக்கப் போகிறார்களே தவிர நாட்டைக் கட்டியெழுப்ப அல்ல.

இந்த நாட்டை திவால் நிலையில் இருந்து மீட்கும் எண்ணம் , முதலில் ஆளும் கட்சிக்கே இருக்க வேண்டும்.

‘போராட்டக்காரர்களது கருத்தை செவிமடுத்து எங்கள் ஜனாதிபதி, பிரதமர் இருவரும் பதவி விலகி விட்டார்கள்.   இப்போது பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஜனாதிபதியையும் பிரதமரையும் நியமிப்போம்….வாருங்கள் ‘ என ஆட்சி தரப்பு எதிர்க்கட்சிகளுக்குச் சொல்ல வேண்டும்,

நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற உயரிய நோக்கம் இருந்தால் இப்படித்தான் மொட்டு கட்சியினர் சொல்ல வேண்டும்.

இன்று மொட்டு கட்சியினர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை தேர்வு செய்து கொண்டு , அமைச்சு பதவிகளை பெற வாருங்கள் என எதிர்க் கட்சியினரை பார்த்து சொல்கிறார்கள்.

ராஜபக்சவினரது குப்பை லொரிகளுக்கு திறமையான தொழிலாளர்கள் தேவை என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

ராஜபக்சவின் பாவங்களை போக்க , அதன் மீது குப்பைகளை போடவே ரணிலை ஜனாதிபதியாக்கினர் என இந்திய அமைதிப்படையிலிருந்த கேணல் ஹரிஹரன் இலங்கை குறித்து எழுதும் சமீபத்திய ஆய்வு கட்டுரையினை படிக்கும் போது தெளிவாகிறது.

ரணில்,  ராஜபக்சக்களின் நிழலினால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ளார்.

ரணிலின் அரசாங்கம் சட்டத்தை பயன்படுத்தி , ராஜபக்சக்களின் தவறுகளை கண்டுபிடிக்காது என்று நினைப்பது நியாயமானது.

கடந்த இரண்டு வருடங்களாக நல்லாட்சி அரசாங்க காலத்தில் ராஜபக்சவினருக்கு எதிராக போடப்பட்ட  வழக்குக் கோப்புகளை ராஜபக்சக்கள் மூடிவிட்டனர், அடுத்த தேர்தல் வரை அவை மீண்டும் திறக்கப்படாது.

இவை அனைத்திற்கும் மேலாக மைத்ரி – ரணில் நல்லாட்சி அரசு காலத்தில் , அன்றைய பிரதமர் ரணிலின் பார்வையினால், ராஜபக்சவினரது மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் விசாரணைகள் பலவீனமடைந்தன…’

மீண்டும் சிறைக்கு செல்ல முடியாத காரணத்தினால் தான் ராஜபக்சவினர் ரணிலை ஜனாதிபதியாக நியமித்தனர் என ஹரிஹரன் கூறுகிறார்.

அப்படிப் பார்க்கும் போது, ​​அனைத்துக் கட்சி ஆட்சியில் இணையும் எந்த எதிர்க்கட்சி உறுப்பினரும் , ராஜபக்சவினரது  அழுக்குகளை கழுவும் லொன்டரி வேலையைத்தான் செய்யப் போகிறார்கள்  என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

– உபுல் ஜோசப் பெர்னாண்டோ
தமிழாக்கம் : ஜீவன்

1 Comment
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    ரணிலின் வேலை மற்றவர்களின் குற்றங்களை கழுவுவதாகும்
    ஆனால் நாட்டைப் பற்றிய கவலை இல்லை
    நாட்டை ஆளவும் தெரியாது

Leave A Reply

Your email address will not be published.