சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி

இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த வகையில் ஜனவரி -26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களுடன் இனி வரும் காலங்களில் கூடுதலாக மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினம் மற்றும் நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம் ஆகிய நாட்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும் மக்கள் இயக்கமாக மீண்டும் நவம்பர் 1 ஆம் தேதி ‘உள்ளாட்சிகள் தினமாக’ கொண்டாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் திங்கட்கிழமை, ஆகஸ்ட் 15 ஆம் நாள், நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி கிராம சபை கூட்டத்தினை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

குறைவெண் வரம்பின் படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், கிராம சபை கூட்டம் நடைப்பெற உள்ள இடம் நேரம் ஆகியவை கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளளது. மேலும், கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராம சபை கூட்டம் குறித்த அறிக்கையை வரும் 22 ஆம் தேதிக்குள் அனுப்ப அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.