பாஜக கூட்டணியில் விரிசல்: நிதிஷ் குமாரின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன.. சூடு பிடிக்கும் பீகார் அரசியல் களம்

பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதாதளம் இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தனது கட்சி எம்.பி., எம்எல்ஏ-க்களுடன் நிதிஷ்குமார் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பீகாரில் பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கும் பாஜக மேலிடத்திற்கும் அண்மைக்காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. பாஜக ஏற்பாடு செய்யும் ஆலோசனைக் கூட்டங்களையும் பிரதமர் மோடியுடனான சந்திப்பையும் கடந்த சில மாதங்களாக நிதிஷ் குமார் தவிர்த்து வருகிறார். குறிப்பாக குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா முதல் நிதி ஆயோக் கூட்டம் வரை, 3 வாரங்களில் மத்திய அரசின் நான்கு முக்கிய நிகழ்ச்சிகளை நிதிஷ் குமார் புறக்கணித்தார்.

இதனால், பாஜக உடனான கூட்டணியில் இருந்து அவர் வெளியேற உள்ளதாக கூறப்படும் நிலையில், சோனியா காந்தியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சந்திக்க நேரம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்பி மற்றும் எம்.எல்.ஏக்களின் கூட்டம், பாட்னாவில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதாதளம் கட்சி விலகினால், அதற்கு ஆதரவு அளிக்கத் தயார் என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் அறிவித்துள்ளன.ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவர்கள் கூட்டமும் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் தலைநகர் பாட்னா-வுக்கு வந்துள்ளதாகவும், 10-ம் தேதிவரை பாட்னாவிலேயே தங்கியிருப்பார்கள் என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் மதன் மோகன் ஜா கூறியுள்ளார். தாங்கள் ஏற்கனவே ராஷ்ட்ரிய ஜனதாதளத்துடன் கூட்டணியில் இருப்பதாகவும், முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சூழலில், துணை முதலமைச்சர் தர்கிஷோர் பிரசாத் இல்லத்துக்கு பாஜக தலைவர் வருகை தந்தனர். அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். இதனால், பீகார் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 2020-ம் ஆண்டில் தேர்தல் நடைபெற்ற நிலையில், பாஜக-வுக்கு 77 உறுப்பினர்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதாதளத்துக்கு 45, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு 9 உறுப்பினர்கள் உள்ளனர். இதேபோல, ராஷ்ட்ரிய ஜனதாதளத்துக்கு 75, காங்கிரஸுக்கு 19 மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு 16 உறுப்பினர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.