பன்னீர்செல்வத்துக்கு ஓகே.. எடப்பாடி பழனிசாமிக்கு நோ: டிடிவி தினகரன்

ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அதேவேளையில் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் அதிமுக உட்கட்சி பூசல் என்பது தொடர் கதையாகியுள்ளது. இதில், ஒற்றைத் தலைமை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையேயான மோதல்போக்கு நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. தாங்கள்தான் உண்மையான அதிமுக என இருதரப்பும் கூறி வருகிறது. தற்போது இந்த விவகாரம் இந்திய தேர்தல் ஆணையம் முடிவுக்காக காத்திருக்கிறது.

ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் அதிமுக என்பது எடப்பாடி பழனிசாமி தரப்பு, சசிகலா தரப்பு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு என மூன்றாக பிரிந்துள்ளது. யார் அதிமுக என்ற போட்டியில் இருந்த டிடிவி தினகரன், அதன் பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என புதிதாக கட்சியை தொடங்கி அதில் கவனம் செலுத்தி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றிணைந்து அதிமுகவை கைப்பற்றக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில், இது தொடர்பாக டிடிவி தினகரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், கடந்த சட்டமன்ற தேர்தலில்போதே அதிமுக அமமுக ஆகிய கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க டெல்லியைச் சேர்ந்த நலம் விரும்பிகள் விரும்பியதாகவும் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதால் அவருக்கு பதிலாக வேறு யாரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிருத்தினாலும் தான் ஏற்க தயார் என தெரிவித்ததாகவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். எனினும், எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நடராஜன் இறப்பின்போது சசிகலாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் 15 நாட்கள் பரோல் வழங்க தயாராக இருந்தபோது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறி 5 நாட்களுக்கு மேல் பரோல் தரக்கூடாது என்றும் அரசியல் தலைவர்களை சந்திக்க கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி அரசு தெரிவித்தபோதுதான் அவரது கொடூர முகத்தை தெரிந்துகொண்டதாகவும் எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்துபணியாற்ற வாய்ப்பு உள்ளதாவும் ஆனால் எடப்பாடி பழனிசாமியுடன் இணைய வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.