பேராசிரியையின் வேலையை பறித்த இன்ஸ்டாகிராம் நீச்சல் உடை புகைப்படம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடை புகைப்படத்தை பதிவிட்டிருந்த பேராசிரியையை கொல்கத்தாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்துள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தின் மாண்பை குலைத்ததாக ரூ.99 கோடி கேட்டு பேராசிரியைக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் புகழ்பெற்ற செயிண்ட் சேவியர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த உதவி பேராசிரியை ஒருவர் கடந்த ஆண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக மாணவர் ஒருவரின் தந்தை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியையை அழைத்து விசாரணை நடத்தியது. அப்போது, தான் பல்கலைக்கழகத்தின் பணியில் சேர்வதற்கு முன்பாக அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில் (24 மணி நேரத்தில் தானாக அழிந்துவிடும்) வைத்ததாகவும். தனது இன்ஸ்டாகிராம் கணக்கு பிரைவேட் கணக்கு என்பதால் வெளியாட்கள் அதனை பார்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தனது நீச்சல் உடை புகைப்படம் எப்படி கசிந்தது என தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் இதனை ஏற்க மறுத்த பல்கலைக்கழகம் அவரை கட்டாயப்படுத்து வேலையை ராஜினாமா செய்ய வைத்துள்ளனர். மேலும், பல்கலைக்கழகத்தின் மாண்பை குலைத்ததாக கூறி ரூ.99 கோடி கேட்டு வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நியூஸ்18 ஊடகத்திடம் பேட்டியளித்த பாதிக்கப்பட்ட பெண், “. “பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்ட குழுவின் முன் ஆஜராகும்படி என்னிடம் கூறப்பட்டது. அவர்கள் எனது புகைப்படங்களை என்னிடம் காட்டினார்கள், அவர்கள் ஏற்கனவே எனது அனுமதியின்றி எனது புகைப்படங்களை பிரிண்ட்-அவுட் எடுத்துள்ளனர். இவை எனது படங்கள்தானா என்றும், இந்த படங்கள் மாணவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை நான் அறிந்திருக்கிறேனா என்றும் அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.

அக்டோபர் 7 முதல் அவர்கள் என்னிடம் தகவல் கொடுத்தனர். பதிலளிக்க எனக்கு நேரம் கொடுக்கப்படவில்லை. அக்டோபர் 8 ஆம் தேதி நான் துணைவேந்தரை சந்தித்தபோது, என் மீது வழக்கு தொடரப்போவதாக மிரட்டினார். இதனால் என் வேலையை ராஜினாமா செய்ய வேண்டியதாகிற்று’ என தெரிவித்தார். நான் எந்த விதியை மீறினேன்? என்னை பணியமர்த்துவதற்கு முன்பு அவர்கள் ஏன் சமூக ஊடக மதிப்பீட்டைச் செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.