ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்த இரண்டு பெண்கள் கைது.

ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ நாற்காலியில் அமர்ந்திருந்த இரு பெண்களை கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 49 மற்றும் 55 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு சந்தேக நபர்களும் மாளிகைக்குள் நுழைந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ஆசனத்தில் அமர்ந்திருப்பதை வெளியான புகைப்படங்கள் காட்டுகின்றன.

ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த சந்தேகநபர்களின் பல புகைப்படங்கள் பொலிஸாரால் ஊடகங்களில் வெளியிடப்பட்டதுடன், அவர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியும் கோரப்பட்டது.

ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்களை அடுத்து இந்த இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இரண்டு கடைகளை நடத்தும் பெண்கள் எனவும் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தும், காலிமுகத்திடலில் ஆரம்பித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கடந்த 9ஆம் திகதி முதல் கொழும்பு வந்த மக்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து பல நாட்கள் தங்கியிருந்தனர். ஜனாதிபதியின் மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து அதன் சொத்துக்கள் திருடப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.