இடைக்கால பட்ஜட் ஆகஸ்ட் 30 இல் சபையில் சமர்ப்பிப்பு!

இந்த வருடத்தின் மீதமான நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு – செலவுத் திட்டம் இம்மாதம் 30 ஆம் திகதி நிதி, திட்டமிடல் அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மேற்படி இடைக்கால வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் அரசின் செலவினம் உள்ளிட்ட 30 ஆம் இலக்க குறைநிரப்பு பிரேரணை கடந்த 9ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தனவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்தக் குறைநிரப்பு பிரேரணையில் 3 ஆயிரத்து 275 பில்லியன் ரூபா அரச செலவினமாகும்.

2021 நவம்பர் 07 ஆம் திகதி அப்போது நிதி அமைச்சராகப் பதவி வகித்த பஸில் ராஜபக்‌சவால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் அரச செலவினம் 2 ஆயிரத்து 796 பில்லியனாக மதிப்பிடப்பட்டிருந்தது. அந்த மதிப்பீட்டுக்கு மேலதிகமாக இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் 479.4 பில்லியன் அதிகமாகக் காணப்படுகின்றது.

கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகரித்த நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், இம்முறை வரவு -செலவுத்திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அதிக முதல் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அந்த அமைச்சுக்கு 734.6 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அதிகரித்த நிதியாக பாதுகாப்பு அமைச்சுக்கு 654.3 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.