ரணிலின் தூக்கத்தை கெடுக்கும் , கோட்டாவின் வருகை செய்தி – உபுல் ஜோசப் பெர்னாண்டோ

அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை பதவியை விட்டு அகற்றுவதற்காக அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை (Impeachment) ஒன்று வந்தபோது, ​​ரணசிங்க பிரேமதாசவுக்கு அவரது நம்பிக்கைக்குரிய பிக்கு ஒருவர் ஆலோசனை ஒன்றை வழங்கினார்.

ரணசிங்க பிரேமதாச

பிரேமதாசவின் ஜாதகத்தை கவனமாகப் படித்த பின்னரே பிக்கு அந்த ஆலோசனையை வழங்கினார்.

‘உங்களுக்கு நேரம் சரியில்லை.

அரச காலத்தில் ஒரு நடைமுறை இருந்தது. அரசனுக்குத் தீமை வரும்போது, ​​அந்தத் தீமையிலிருந்து தப்பிக்க அரசன் காட்டுக்குச் செல்வான். அரசாட்சியை விட உயிர் மதிப்புமிக்கது என்று எண்ணி அரசாட்சியை கைவிட்டு காட்டுக்குள் சென்று , மாற்றம் வந்த பின் மீண்டும் திரும்புவார்.

இன்றைக்கு காட்டுக்குப் போக முடியாது. எனவே நீங்கள் வெளிநாடொன்றுக்கு போய் கொஞ்ச நாள் இருந்துவிட்டு , மீண்டும் வாருங்கள். ..’

பிரேமதாசவுக்கு பிக்கு வழங்கிய அறிவுரை அது.

‘நான் எதிரிகளுக்கு வெற்றியைக் கொடுத்து விட்டு , எப்படி தோற்றவனாக அப்படி போவது…?’ என பிரேமதாச பதிலுக்கு கேட்டார்.

கோட்டாவுக்கு நடந்ததை பார்க்கும் போது இந்த பழைய கதைதான் நினைவுக்கு வருகிறது. கோட்டாவுக்கு காலம்  நல்லதா? சரியில்லையா? என்று தெரியவில்லை.

ஆனால் கோட்டா தனது அரச பதவியை இழந்து வெளியேறினார்.

‘கோட்டா ஏன் பதவியை விட்டு போனார்…?’

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா நியமிக்கப்பட்ட போது, ​​கோட்டா டெர்மினேட்டர் போன்றவர் என பசில் கூறினார்.

அன்று, ​​டெர்மினேட்டர் என்ற வார்த்தைக்கு அப்போதைய பிரதமர் ரணில் சரியதான சிங்கள அர்த்தத்தை கொடுத்தார். டெர்மினேட்டர் என்பது அனைத்தையும் இல்லாதொழிப்பவன் என அர்த்தப்படும் என்றார் ரணில்.

டெர்மினேட்டர் வந்தால் கடந்த ஐந்தாண்டுகளில் நாட்டிற்காக நாம் வென்றெடுத்த ஜனநாயகம் இல்லாமல் போகும். ஊடக சுதந்திரம் இல்லாமல் போகும். மனித உரிமைகள் இல்லாமல் போகும்…’

ஆகஸ்ட் 10, 2019 அன்று பசிலின் டெர்மினேட்டர் கதைக்கு ரணிலின் பதில் இப்படியாக இருந்தது.
‘அப்படியானால் கோட்டாவால் ஏன் அரகலய போராட்டத்தை அழித்தொழிக்க முடியவில்லை…?’

எல்லோருடைய கேள்வியும் அதுதான். மைத்திரி – ரணில் ஆட்சிக் காலத்தில் மைத்திரி – ராஜபக்சே இருவருமே ரணிலை ‘பட்டாம்பூச்சி’ என்று அழைத்தனர். இறுதியாக இன்று வண்ணத்துப்பூச்சி ஒரு டெர்மினேட்டராக மாறிவிட்டது. டெர்மினேட்டர் என அழைக்கப்பட்ட கோட்டா ,  பட்டாம்பூச்சியாக மாறி பறந்து விட்டது.

‘அந்த வண்ணத்துப்பூச்சி மீண்டும் மொட்டில் தேன் குடிக்க வருமா…?’

கோட்டா நாட்டை விட்டு வெளியேறிய பின் ,   ஜனாதிபதியாக ரணில் பதவியேற்ற நாளிலிருந்தே , அரகலய போராட்டத்தை  இல்லாதொழிக்க செயல்படுவதற்கு காரணம்,  தானும் அரகலயகாரர்களது போராட்டத்துக்கு பயந்து வீட்டுக்கு செல்ல வேண்டி வருமோ என்ற அச்சத்தால் எனலாம்.

ஆனால் ரணில் அரகலய போராட்டத்தை அழிக்க முயற்சிப்பதால்  , மீண்டும் கோட்டாவுக்கு இலங்கையில் கால் பதிக்கக் கூடிய வாய்ப்பு  கிடைத்துள்ளது. மறுபுறம், ரணில் அரகலய போராட்டத்தை அழிக்க செயல்படும்  போது, ​​கோட்டா கோ கோம் என்ற அனைவரும் , இப்போது கோட்டா நல்லவர் , கோட்டா மக்களுக்கு பயப்படுபவர் என்ற ஒரு தோற்றத்தை  மக்கள் மனதில் ஏற்படுத்தி வருகிறது. 

ஒரு பக்கம் ரணில் அரகலய போராட்டத்தை அழித்து , கோட்டா மீண்டும் வருவதற்கு பாதையை திறப்பது மட்டுமல்லாமல், ஹிட்லரைப் போல் எனச் சொல்லப்பட்ட  கோட்டாவை,  ஜனநாயகவாதியாக்குகிறார்.

ஆட்சியைக் கைப்பற்ற ரணில் பயங்கரமாக விளையாடுவார் என்றாலும்,  ரணில் ஆட்சியைப் கைப்பற்றிய பிறகெல்லாம் ராஜபக்சேக்கள்தான் அவரது ஆட்டத்தை சாதகமாக்கிக் கொண்டார்கள்.

2015ல் ரணிலும்,  மைத்திரியும் இணைந்து ராஜபக்சக்களை வீட்டுக்கு அனுப்பிவிட்ட பின்னர் , மைத்ரி தனக்கு ஆப்பு வைத்துவிடுவாரோ என்று பயந்த ரணில் , ராஜபக்சவினரை , அவர்களது வழக்குகளில் இருந்து காப்பாற்றிதோடல்லாமல் ,  ராஜபக்சவினரை பாதுகாத்து , மைத்திரியை முடிவுக்கு கொண்டு வர ராஜபக்சவினருக்கு புதிய கட்சியொன்றை உருவாக்க ஆதரவளித்தார்.

ராஜபக்சவின் புதிய கட்சி, மைத்திரியின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வாக்குகளை சிதைத்து ,  ரணில் தலைமையிலான  யூ.என்.பி. வாக்குகளால் தான்  ஜனாதிபதியாகும் வாய்ப்பு உருவாகும்  என ஒரு கணக்கு போட்டார்.

ஆனால் நடந்தது என்னவெனில், ரணில் போட்ட கணக்கு , தப்பு கணக்காகி , ரணிலுக்கு ஒரு ஆசனம் கூட பெற முடியாத அளவுக்கு ஆனது.

இப்போதும் ராஜபக்சவினரது தயவில், அரகலய போராட்டத்தை நசுக்கினால் ஜனாதிபதி பதவியை காப்பாற்றிக் கொள்ளலாம் என ரணில் நினைக்கிறார்.

ஆனால் நடக்கப் போவது, ரணில் அரகலய போராட்டத்தை அழித்தொழிக்கும் போது, ​​ மீண்டும் கோட்டாவால்  இலங்கைக்கு வரும் வழி உருவாக்கியிருப்பதுதான்.

இலங்கை வரும் கோட்டா என்ன செய்வார்…?’

இப்படி பலர் சொல்கிறார்கள்.

கோட்டா பொதுமக்களுக்கு கசப்பாகிப் போனவர். கோட்டாவுக்கு வாக்களித்தவர்களுக்கும் கசப்பானவர். கோட்டா இந்த நாட்டை திவாலாக்கிவிட்டார் என்ற அவதூறில் இருந்தும் கோட்டாவால் தப்ப முடியாது. ஆனால் பொதுஜன பெரமுனவில் ராஜபக்சவை வணங்கும் வாக்காளர்கள் என ஒரு  தொகையினர் உள்ளனர். இந்த வாக்காளர் தளம் இன்று கோமா நிலையில் உள்ளது. இது அரசியல் மயக்கம் போன்றது.

அவர்களுக்கு மீண்டும் வணங்க ஒரு ராஜபக்ச இல்லை. மீண்டும் நிமிர்ந்து வீர நடை போடுமளவுக்கு இல்லாத மகிந்த இன்று பலவீனமானவர். பசில் மக்கள் ஆதரவு அற்றவர். நாமலுக்கு மக்கள் அங்கீகாரமே இல்லை.

இந்த வாக்கு தளத்தை கைப்பற்றத்தான்  ரணில், டலஸ், விமல் ஆகியோர் கடும் போரொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

தம்மிடம் இருந்து நழுவிக்கொண்டிருக்கும் இந்த வாக்குத் தளத்தை ராஜபக்சக்களே தக்கவைத்துக் கொள்ள ஒரே வழி , கோட்டா இருக்கும்  கோமா நிலையில் இருந்து மீட்டு உயிர்ப்பித்து தங்களது வாக்குத் தளத்தை மீட்டெடுப்பதுதான். ராஜபக்சக்கள் அரசியலில் மீண்டும் தலைதூக்க வேண்டுமாயின் கோட்டாபயவை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்.

‘கோட்டாவுக்கு உயிர் வருமா…?’

ராஜபக்சக்கள் , ரணிலை  ஜனாதிபதியாக இருக்க  அனுமதித்துவிட்டு இப்படி மறைந்து வாழ்ந்தால் , ராஜபக்சக்களின்  சரித்திரம் முடிந்து போகும்.

தாங்கள் செய்த பாவங்களை ரணிலின் தலையில் போட்டு விட்டு , ரணில் மேல் மக்கள் அதிருப்தி அடையும் போது , மீண்டும் மக்களின் மீட்பர்களாக ராஜபக்சக்கள் வரலாம் என  நினைத்தால் அது நடக்காது.

ஏனெனில் ரணிலின் ஒவ்வொரு தவறுக்கும் ராஜபக்சக்களும்தான் பங்காளிகளாக வேண்டும்.

ரணிலின்  ஒவ்வொரு செயலுக்கும்  50% பொறுப்பு ராஜபக்சவினருக்கும் உண்டு . காரணம் ரணிலை ஜனாதிபதியாக்கியது ராஜபக்சக்கள்.

ஆக, ரணில் பொய்யராகி , கேவலப்பட்ட பின் , ராஜபக்சக்களால் ஆட்சிக்கு வர முடியும் என கணக்குப் போடுகிறார்கள் எனவும்  நினைக்க முடியாது. இந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றினால்தான் ராஜபக்சக்கள் இழக்கப்போகும் வாக்குத் தளத்தை எதிர்காலத்தில் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

‘ராஜபக்சவினர் எப்படி ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவார்களா…?’

கோட்டா இலங்கைக்கு மீண்டும் திரும்பி வந்து தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு வரவுள்ளார் என்ற பரப்புரை அதற்கு வழி வகுக்கும் வகையில் புனையப்பட்ட ஒரு கதைதான்.

‘கோட்டா நாடாளுமன்றம் வருவாரா…?’

ஜே.ஆர்., பிரேமதாச, விஜேதுங்க ஆகியோருக்குப் பின்னர் , ஜனாதிபதியாக வந்த அனைவருக்கும் ,  ஜனாதிபதி பதவியை இழந்த பின் வீட்டில் இருக்க முடியாத ஒரு நோய் தொற்றிக் கொண்டது.

சந்திரிகாவுக்கும் அதே நோய் தாக்காமல் இல்லை. அதனால் தான் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சந்திரிகா ,  ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையை பாதுகாக்க கடுமையாக போராடினார்.

மஹிந்தவும் 2015 இல் தோல்வியடைந்து மீண்டும் எம்.பி.யானார்.

அந்த நோய்க்கு மைத்ரிக்கும் தொற்றிக் கொண்டது.

கோட்டாவுக்கு அதே நோய் வர வாய்ப்புள்ளது. அதற்கு காரணம் அவருக்கு எதிராக சர்வதேச மனித உரிமை அமைப்புகள், போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களுக்காக அவர் மீது வழக்குத் தொடர காத்திருக்கின்றன. அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரானால் அந்த வழக்குகளில் இருந்து கோட்டாவுக்கு தப்பித்துக் கொள்ள சிறிதளவாவது வாய்ப்புகள் உள்ளன.

‘கோட்டா நாடாளுமன்றம் வந்த பின் , 134 எம்.பி.க்கள் கோட்டா ஜனாதிபதியாக வேண்டும் என்று மனுவொன்றில் கையெழுத்திட்டால்…?’

அதற்கு முன் கோட்டா பிரதமராக வேண்டும் என்று 113 எம்.பி.க்கள் கையெழுத்திட்டால், ரணில் கோட்டாவை பிரதமராக்க வேண்டி வரும். கோட்டா ஜனாதிபதியாக வேண்டும் என்று அதே 134 பேரும் கடிததமொன்றில் கையொப்பமிட்டால், ரணில் ஜனாதிபதியாக உள்ள ஆணையின் நியாயத்தன்மை அப்போது  கேள்விக்குறியாகிவிடும்.

மக்கள் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவரை அகற்றுவதை அரசியலமைப்பு தடுக்க காரணம் , ஜனாதிபதி மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதால்தான்.

நாடாளுமன்றத்தால் நியமிக்கப்படும் பிரதமரை 113 எம்.பி.க்களால் பதவி நீக்கம் செய்ய முடியும்.

நாடாளுமன்றத்தில் 113 வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமரை 113 நாடாளுமன்ற உறுப்பினர்களது வாக்குகளால்  நீக்க முடியும் என்றால், நாடாளுமன்றத்தில் 134 வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதியை ஏன் 134 கையெழுத்துகளால் நீக்க முடியாது…?’

கோட்டா இலங்கைக்கு வரப் போகிறார் என செய்தி வரும் போதெல்லாம் ரணிலுக்கு தூக்கம் வராமலிருப்பதற்கு அதுதான் காரணம்.

உபுல் ஜோசப் பெர்னாண்டோ
தமிழில் : ஜீவன்

 

 

 

1 Comment
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    ரணிலும் ஒரு சுயநலவாதி ரணில் இந்த ராஜபக்ஷ குடும்பத்தை கைது பண்ணினால் மாத்திரமே ரணிலுக்கு நிம்மதி இல்லாவிடில் ரணிலும் பதவி இழக்கவேண்டி வரும் காரணம் ரணிலுக்கு ஆட்சி செய்யும் திறமை இல்லை

Leave A Reply

Your email address will not be published.