விரல் நுனியில் புஷ்அப்.. இதுவரை ஜிம்மிற்கு செல்லாத பஞ்சாப் இளைஞர் கின்னஸ் சாதனை!

இதுவரை ஜிம்மிற்குச் செல்லாத பஞ்சாப் குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். ஒரு நிமிடத்தில் அதிகப்படியான கைதட்டல்களுடன் (விரல் நுனியில்) கூடிய புஷ்-அப்களை செய்வது இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள படாலாவில் உள்ள உமர்வாலா கிராமத்தைச் சேர்ந்த குவார் அம்ரித்பீர் சிங், ஒரு நிமிடத்தில் 45 கைதட்டல்களுடன் (விரல் நுனியில்) கூடிய புஷ்அப்களை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 20 வயதாகும் குவார் சிங் இதற்காக எந்த உடற்பயிற்சி கூடத்திற்கும் சென்று பிரத்யேக பயிற்சிகள் எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த சாதனையை செய்ய சிங் 21 நாட்களுக்கு தினமும் நான்கு மணி நேரம் வீட்டிலேயே பயிற்சி செய்துள்ளார். தினமும் அதிகாலை 4 மணிக்குத் பயிற்சியைத் தொடங்கியுள்ளார். காலையில் இரண்டு மணி நேரம் பயிற்சி செய்துவிட்டு பின்னர் மீண்டும் மாலையில் இரண்டு மணி நேரம் பயிற்சி செய்துள்ளார். இந்த பயிற்சி தான் தன்னை இச்சாதனை வரை அழைத்துச் சென்றதாக பெருமை கொள்கிறார்.

சிறுவயதில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த அவரது தந்தையும் மாமாவும் அவரை உடற்தகுதி பெற தூண்டினர். அதன் காரணமாக உடற்பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தார். பின்னர் குறைந்த நேரத்தில் அதிக பயிற்சி செய்வதை முயற்சிக்க ஆரம்பித்தார். அதுதான் அவரை சாதனைகள் செய்யத் தூண்டியுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி அவர் தனது இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டார். கின்னஸ் இவரது சாதனை முயற்சியை ஜூலை 28 அன்று உறுதி செய்து அங்கீகரித்துள்ளது.

உடற்தகுதி பெற்ற ரகசியம் பற்றி கேட்டதற்கு, “நான் புரோட்டீன் சப்ளிமெண்ட்ஸைப் பயன்படுத்துவதில்லை. சிர்ஃப் கர் கா கானா காதா ஹூன்- நான் வீட்டில் சமைப்பதை மட்டுமே சாப்பிடுவேன். தயிர், பால், வெண்ணெய் மற்றும் நெய் ஆகியவை என் உணவில் நிலையானவை” என்று சிங் கூறினார் .

19 வயதில், குவார் சிங் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் தனது பெயரைக் பதித்துள்ளார். ஜூலை மற்றும் செப்டம்பர் 2020 இல் முறையே ஒரு நிமிடத்தில் அதிக நக்கிள் புஷ்அப்கள் மற்றும் 30 வினாடிகளில் அதிக சூப்பர்மேன் புஷ்அப்கள் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இந்த சாதனைகளை செய்வதற்காக குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இளங்கலை மாணவரான சிங், செங்கற்கள், சிமெண்ட், இரும்பு கம்பிகள், வெற்று பாட்டில்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி தனது சொந்த உடற்பயிற்சி உபகரணங்களை உருவாக்கினார். இதில் பயிற்சி செய்தே அவரது சாதனைகளுக்கான உடற்தகுதிகளை வளர்த்துக்கொண்டதாக தெரிவித்தார்.

சிங் கடந்த ஆண்டு நவம்பரில் மூன்று நிமிடங்களில் அதிக எண்ணிக்கையிலான புஷ்அப் சாதனை செய்ய விண்ணப்பித்தார். ஆனால், அவரது முயற்சி சாதனை பட்டியலுக்கு தகுதி பெறவில்லை. அதற்காக தீவிர பயிற்சி செய்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.