திருக்கோவில் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறி! – கலையரசன் விசனம்.

“நீண்டகால அழிவைச் சந்தித்து வாழ்வை முன்னெடுக்க முடியாது தத்தளிக்கும் எமது உறவுகள் நிம்மதியாக வாழக் கூடிய சூழலை இல்லாமல் செய்யும் செயற்பாடாகவே திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வு விவகாரம் எழுந்திருக்கின்றது. இது திருக்கோவில் மக்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குகின்றது.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் கூறுகையில்,

“எமது திருக்கோவில் பிரதேசத்தை அழிக்கின்ற நோக்கோடு முன்னெடுக்கப்பட இருக்கின்ற இல்மனைட் தாதுப் பொருள் அகழ்வு தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.

திருக்கோவில் பிரதேசம் கடலை அண்டிய மிகவும் வருமானம் குறைந்த குடும்பங்களைக் கொண்ட பிரதேசம்.

இங்கு இல்மனைட் என்று சொல்லப்படுகின்ற தாதுப்பொருள் அகழ்வை முன்னெடுப்பதற்குரிய பணிகளை சுமார் 7 வருடங்களாக மேற்கொள்கின்றபோது பிரதேச மக்களும் அரசியல்வாதிகளும் காட்டிய எதிர்ப்பின் காரணமாகத் தடுக்கப்பட்டிருந்தாலும் தற்போது இந்தச் செயற்பட்டை ஆரம்பிப்பதற்குரிய பணிகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் எமது மக்களுக்குத் தெளிவூட்ட வேண்டியது எமது கடப்பாடாகும்.

ஒரு பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர் ஆகியோர் இருக்கின்ற நிலையில் இதற்கு மாறாக அம்பாறை மாவட்ட அரச அதிபர் காரியாலயத்திலே தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு இல்மனைட அகழ்வு நடவடிக்கைகளை முன்னெடுப்போவதாக நாங்கள் அறிகின்றோம்.

இவ்வாறான செயற்பாடுகளை நாங்களும் எமது மக்களும் எதிர்க்கின்றோம்.

குறிப்பாக இந்த பிரதேசம் கடந்த காலங்களில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு பயன் தருகின்ற பல மரங்கள் கூட அழிவுற்று எமது ஆலயங்கள் மக்களின் வீடுகள் எல்லாம் கடலால் சூழப்படுகின்ற நிலையிலே இவ்வாறான இல்மனைட் தாதுப் பொருள் அகழ்வு இடம்பெற்றால் எமது இந்தப் பிரதேசத்துக்கு மிகவும் பாரிய அழிவு ஏற்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

நீண்டகால ஒரு அழிவைச் சந்தித்து இந்தப் பிரதேசத்தலே தங்கள் வாழ்வை னெடுக்க முடியாமல் தத்தளிக்கும் எமது உறவுகள் சுதந்திரமாக – நிம்மதியாக வாழக் கூடிய ஒரு சூழலை இல்லாம் செய்யும் விடயமாகவே இந்த இல்மனைட் அகழ்வு விடயம் அமையும்.

இந்த அடிப்படையில் எமது பிரதேசத்தில் இவ்வாறான தாதுப் பொருள் அகழ்வை நாங்கள் முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம்.

இதன் விளைவாக எமது மக்களின் வாழ்வாதாரமாக மேற்கொள்ளப்படுகின்ற மேட்டுநிலப் பயிர்ச்செய்கை கூட பாதிக்கப்படும்.

இவ்வாறான அகழ்வுகள் நடைபெறுகின்றபோது நிலக்கீழ் நீர் உவர் நீராக மாற்றம் பெற்று எமது மக்கள் குடிநீருக்கும் அவதியுற்று நோய்வாய்ப்படும் அச்சுறுத்தலும் எதிர்காலத்தில் இடம்பெற வாய்ப்புண்டு.

எனவே, எமது பிரதேசத்தில் இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். எமது மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு உதவிகளைச் செய்வதைத் தவிர்த்து அவர்களை அழிப்பதற்குரிய விடயங்களைக் கையாள்வதாகவே இதனை நாங்கள் கருதுகின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.