இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஐ.நாவின் உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளிப்படுத்திய பொறுப்புக்கூறல் திட்டத்தை – உலகளாவிய நியாயாதிக்கப் பிரயோகத்தை முன்னெடுக்க வேண்டும் என்று சபையின் உறுப்பு நாடுகளை சர்வதேச மன்னிப்புச் சபை பகிரங்கமாகக் கோரியுள்ளது.

அத்துடன் தற்போதைய நெருக்கடியின் மையத்தில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான நிலைமைகளைக் கண்காணிப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும், பரிந்துரைகளை வழங்குவதற்கும் இலங்கை தொடர்பான நிபுணர் பொறிமுறையை அமைக்க வேண்டும் என்றும் மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

இலங்கை கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இலங்கையில் தண்டனையின்மை என்பது சட்டத்தின் ஆட்சி, நல்லிணக்கம், நிலையான அபிவிருத்தி என்பவற்றுக்கு மையத்தடையாக உள்ளது.

போர் முடிவடைந்து பதின்மூன்று வருடங்கள் கடந்த போதும், ஆட்சிக்கு வரும் அரசுகள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பயனுள்ள நிலைமாறுகால நீதி செயல்முறையைத் தொடரத் தவறி வருகின்றன.

போர்க்குற்றவாளிகள் என்று கூறப்படுபவர்களுக்கு அரச பதவிகள் மற்றும் வெகுமதிகளை வழங்கியது. காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் அலுவலகம் போன்ற உள்நாட்டு நிலைமாற்று நீதி அமைப்புகள், இழப்பீடுகள் பெரும்பாலும் பொருத்தமற்றதாகிவிட்டன. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நம்பிக்கையை இழந்துவிட்டன.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து சர்வதேச கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் மிகவும் முக்கியமானது.

இந்தநிலையில் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டத்தை பலப்படுத்துவதற்காக இலங்கை மீதான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு உறுப்பு நாடுகளை மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

அத்துடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்து, அதன் பயன்பாட்டுக்கு உடனடித் தடை விதிக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அமைதியான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

அத்துடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு அதை முழுமையாக செயற்படுத்தவேண்டும் என்பதை இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளிடம் கோரியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.