நாக்கை அறுத்து அம்மனுக்கு பலி காணிக்கையாக கொடுத்த பக்தர்..! – உ.பி.யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

உத்தரப் பிரதேசத்தில் அம்மன் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் தனது நாக்கை அறுத்து பலி காணிக்கையாக கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கவுஷாம்பி பகுதியில் வசிப்பவர் 38 வயதான சம்பந்த்.இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது மனைவி பன்னோ தேவியிடம் அப்பகுதியில் உள்ள மா ஸ்ரீதலா அம்மன் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். அதற்கு அவரது மனைவியும் சரி என்று தெரிவிக்க அடுத்த நாள் காலை அவரும் அவரது மனைவியும் கோயிலுக்கு அருகே உள்ள கங்கை நதியில் புனித நீராடினர்.

அங்கு சில சடங்குகளை செய்த பின்னர் அம்மன் கோயிலுக்கு சென்று பிரகாரத்தை சுற்றி வந்துள்ளார். பின்னர் திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக கையில் கத்தியை எடுத்துக்கொண்டு தனது நாக்கை அறுத்து அதை கோயிலில் பலி காணிக்கையாக தந்துள்ளார்.

இவரின் இந்த திடீர் செயலால் மனைவி உள்ளிட்ட அருகே இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இவர் தற்போது மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். தனது கணவர் இதுபோன்று நாக்கை அறுத்து பலி கொடுப்பார் என நினைத்து பார்க்கவே இல்லை, இது குறித்து அவர் என்னிடம் ஏதும் தெரிவிக்கவில்லை. இப்படி இவர் செய்வார் என நான் நினைத்து பார்க்கவில்லை என மனைவி பன்னோ தேவி கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.