மரத்தில் ஏறியதோ இளவரசியாக ,மரத்தை விட்டு  இறங்கியதோ மகாராணியாக …..

1952 பிப்ரவரி மாதம் விடியும்போது, ​​பிரிட்டிஷ் கிரீடத்தின் அடுத்த உரிமையாளராக போவதை அறியாத இளவரசி எலிசபெத் கென்யாவில் இருந்தார்.

அந்த நேரத்தில் பிரிட்டனின் மன்னர், கிங் ஜார்ஜ் VI, கென்யாவின் மன்னராகவும் இருந்தார், எனவே இளவரசி எலிசபெத் மற்றும் அவரது இளவரசர் பிலிப் ஆகியோருக்கு அங்கு அன்பான வரவேற்பு கிடைத்தது.

இளவரசி எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோர் நீண்ட காமன்வெல்த் பயணத்தின் பின் கென்யாவை வந்தடைந்தனர்.

ஆறாம் ஜார்ஜ் மன்னர் தனது உடல்நிலை  சரியில்லாத காரணத்தால் தனது மகளையும் மருமகனையும் நீண்ட பயணத்திற்கு அனுமதித்தார்.

இளவரசி எலிசபெத் ஒரு விலங்கு பிரியர் என்பதால், இளம் இளவரசி எலிசபெத் ஆசிய-ஆப்பிரிக்க பிராந்தியத்தில் ஐந்து மாத சுற்றுப்பயணத்தை ஆர்வத்துடன் கழித்தார்.

கென்யா வந்த இளவரசிக்கு அந்நாட்டு வனப் பகுதிகளுக்குச் செல்வதே பெரிய அவசரம். உத்தியோகபூர்வ கடமைகளை உடனடியாக முடித்துக் கொண்டு, இளவரசர் பிலிப்புடன் சேர்ந்து காட்டுப் பயணத்தைத் தொடங்கினார். அவர் விலங்குகளை பார்த்து ரசிப்பதில் மிக பிரியமானவராக இருந்தார்.

பிப்ரவரி 5, 1952 அன்று, அவர் கென்யாவின் அபெர்டேர் (Aberdare) தேசிய பூங்காவில் இருந்தார்.

கடல் மட்டத்திலிருந்து 1,966 மீட்டர் (6,450 அடி) உயரத்தில் அமைந்துள்ள அபெர்டேர் தேசிய பூங்கா லோபுரா அதன் தனித்துவமான அறைக்கு பிரபலமானது.

ஒரு பெரிய அத்தி மரத்தின் மேல் கட்டப்பட்ட இந்த அறை ட்ரீ டாப் என்று அழைக்கப்பட்டது மற்றும் பிரபல வேட்டைக்காரனும் எழுத்தாளருமான மேஜர் ஜிம் கார்பெட்டின் யோசனையின்படி கட்டப்பட்டது.

இந்திய வேட்டைத் தளத்தைப் போலவே கட்டப்பட்ட இது, விலங்குகளை நெருக்கமாகக் கண்காணிக்க அனுமதித்ததால், அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது. (அத்தி மரம் என்று குறிப்பிடப்பட்டாலும், இந்த ஆலை இதே போன்ற ஆப்பிரிக்க கிளையினமாக இருக்கலாம்.)

பிப்ரவரி 5, 1952 விஜயத்திற்குப் பிறகு, இளவரசி மற்றும் பிரபுவின் ஹோட்டல் அறைக்கு வந்த அறை உதவியாளர் அவர்களின் அனைத்து தேவைகளையும் பார்த்துவிட்டு ‘குட் நைட் இளவரசி’ என்று வாழ்த்தினார்.

ஆனால் அந்த இரவு இளவரசிக்கு மட்டுமல்ல, முழு சூரிய கிரீடத்திற்கும் சிறப்பு வாய்ந்தது.

அது தெரியாமல், மறுநாள் (பிப்ரவரி 06) காலை எழுந்த இளவரசி எலிசபெத் தன் மூவி கேமராவை எடுத்தாள்.

அறையில் இருந்து வெளியே தெரியும் யானைக் கூட்டத்தை அவள் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார். யானைகளை ரசித்துக் கொண்டிருந்த இளவரசிக்கு , அவரது அறையின் கதவை வெளியிலிருந்து ஒருவர் தட்டும் சத்தம் கூட  கேட்கவில்லை.

அந்த சத்தம் கேட்டு இளவரசர் பிலிப் எழுந்து வந்து விரைவாக கதவைத் திறந்தார்.

நேற்றைய இரவு அவருக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்த அறை உதவியாளர் பயந்த முகத்துடன் வெளியில் நின்று கொண்டு இருந்தார்.

குட் மார்னிங், ராணி, என்ற போது அவர் குரலில் நடுக்கம் வெளிப்பட்டது. இளவரசி எலிசபெத்திடம் அந்த துயர செய்தியை சொன்னார்.

அழியாத பேரரசின் கிரீடத்தை வைத்திருந்த இளவரசி எலிசபெத்தின் தந்தையான மன்னர் ஆறாம் ஜார்ஜ், முந்தைய இரவு தூக்கத்தில் இறந்துவிட்டார் என்ற துயரச் செய்திதான் அது,

அவள் இனி இளவரசி அல்ல, பிரிட்டனின் ராணி என்றும் அறிந்தாள். 

ஆப்பிரிக்காவுக்கான அரச குடும்பப் பயணத்தை ரத்து செய்த அரச குடும்பத்தினர் உடனடியாக பிரிட்டன் செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி, பிப்ரவரி ஐந்தாம் தேதி இரவு, அத்தி மரத்தில் ஏறிய இளவரசி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி வின்ட்சர், ராணி இரண்டாம் எலிசபெத் ஆக மரத்தில் இருந்து இறங்கி நைரோபி வந்தடைந்தார்.

உகாண்டாவின் என்டபே வழியாக பிரிட்டனுக்கு வந்த இரண்டாம் எலிசபெத் மகாராணி, ஜூன் 2, 1953 அன்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அவருக்கு அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடத்தது.

ஏப்ரல் 21, 1921 இல் பிறந்த இளவரசி எலிசபெத், சிறுவயதிலிருந்தே பிரிட்டிஷ் அரச மரபுகளை நன்கு புரிந்து கொண்டவர்.

அவர் தனது தந்தை, கிங் ஜார்ஜ் VI உடன் நெருக்கமாக பணியாற்றினார், அவருக்கு அரசு விவகாரங்களில் உதவினார், மேலும் 1939 இல் இரண்டாம் உலகப் போர் வெடித்தபோது அவருக்கு 13 வயது.

1939 ஆம் ஆண்டில், அப்போதைய 13 வயது இளவரசி எலிசபெத் மற்றும் அவரது சகோதரி இளவரசி மார்கரெட் ஆகியோர் பிரிட்டனின் ராயல் நேவல் கல்லூரிக்குச் சென்றனர்.

அவர்களின் துணையாக ஒரு இளம் கேடட் இருந்தார். ஒரு அரச குடும்பத்திலிருந்து வந்த பிலிப் என்ற இந்த கேடட், கிங் ஜார்ஜ் மற்றும் கிரீஸ் இளவரசி ஆலிஸின் மகனான இளவரசர் ஆண்ட்ரூவுக்குப் பிறந்தவராக இருந்தார்.

அவரது பெற்றோரின் திருமணம் முறிந்ததால், சிறிய பிலிப் பெரும்பாலும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசித்து வந்தார்.

இளமையின் வாசலை எட்டியிருந்த இளவரசி எலிசபெத்தின் இதயத்தில் இந்த இளம் கேடட் நிரந்தரமாக குடியேற சிறிது காலம் பிடித்தது.

இந்த நேரத்தில்தான் அடால்ஃப் ஹிட்லரின் நாஜிப் படைகள் ஐரோப்பாவை எரித்து இரண்டாம் உலகப் போரை நடத்தியது.

பாதுகாப்பு கருதி அரச குடும்பத்தை லண்டனில் இருந்து வெளியேற்ற நண்பர்கள் முயன்றனர், ஆனால் பலனில்லை. பல்லாயிரக்கணக்கான குண்டுகள் விழுந்து வெடித்து போர் வெடித்தபோது பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு தெரியாத ஒன்று நடந்தது.

இது இளவரசி எலிசபெத்துக்கும் , இளவரசர் பிலிப்புக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றமாகும். அரச குடும்பத்தைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட உளவாளிகளது கண்ணில் படாமல் நடந்த இந்தக் கடிதப் பரிவர்த்தனையை இளவரசி மார்கரெட் மட்டுமே அறிந்திருந்தார்.

1944 இல், 18 வயதில், இளவரசி எலிசபெத் பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர்ந்தார்.

டிரக் டிரைவர் மற்றும் டெக்னீஷியனாக அவர் பணி புரிந்தார்.

வருங்கால ராணிக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் அங்கு இல்லை, அவளும் வாகனங்களுக்கு அடியில் ஊர்ந்து  வேலை செய்ய வேண்டியிருந்தது.

இராணுவத்தின் தொழில்துறை வேலை காரணமாக, இளவரசி எலிசபெத் வாகனங்களில் அதிக ஆர்வம் காட்டினார்.

அவரது வாகனங்களின் சேகரிப்பில் மோரிஸ் மைனர் மனம் கவர்ந்ததாக உள்ளது, அதன் மீது தனி பாசம் காட்டி, காரை வடிவமைத்த கிரேக்க வம்சாவளியைச் சேர்ந்த அலெக்ஸ் இசிகோனிஸ் என்பவரையும் கவுரவித்தார்.

அவரது கணவரான, இளவரசர் பிலிப் கூட, தனது 98 வயது வரை பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட லேண்ட் ரோவரை ஓட்டினார்.

அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, இளவரசர் பிலிப் ஓட்டிச் சென்ற கார், ஒரு பெண் ஓட்டிச் சென்ற கார் மீது மோதியது, போலீசார் அவரை எந்த சலுகையும் வழங்காமல் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

இளவரசர் பிலிப் இறந்து , இறுதிப் பயணத்தின் போதும் இளவரசரின் உடலை சுமந்து சென்ற கலசம் லேண்ட் ரோவராகும். அவர் விரும்பிய வாகனத்தில் கொண்டு சென்றே அடக்கம் செய்யப்பட்டது.

எலிசபெத் இளவரசி  நவம்பர் 20, 1947 இல் இளவரசர் பிலிப்பை மணந்தார் .

அவர் இளவரசர் சார்லஸ், எட்வர்ட், ஆண்ட்ரூ மற்றும் இளவரசி அன்னே ஆகியோரின் தாயார் ஆனார்.

அவரது கணவர் இளவரசர் பிலிப் (எடின்பர்க் டியூக்) பிரிட்டிஷ் அரச மரபுகளைப் பாதுகாக்க கடுமையாக முயற்சியும் செய்தார்.

அந்த குணத்தை ராணி பலமுறை பாராட்டியுள்ளார்.

ஆனால் இளவரசி டயானாவின் மூத்த மகன் சார்லஸின் (தற்போதைய பிரிட்டிஷ் அரசர்) மனைவியான இளவரசி டயானாவுடன் பலமுறை மோதல்கள் இருந்ததால் அரச குடும்பத்துடன் உடன்படவில்லை என்பது இரகசியமல்ல.

ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், இளவரசர் சார்லஸின் இளைய மகன் இளவரசர் ஹரி அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவதை அவர் சமாளித்துக் கொண்டார்.

இளவரசர் பிலிப் 99 ஆண்டுகள் வாழ்ந்து ஏப்ரல் 21, 2021 அன்று இறந்தார்.

அரச குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் இதை இரண்டாம் எலிசபெத் மகாராணியின் வாழ்க்கையின் மிகப்பெரிய சரிவு என்கிறார்கள்.

அதன் பின்னரே, அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது, கணவரது மறைவுக்கு பின் , அவர் தனது பாரம்பரிய அரண்மனையான பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியேறி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோர் மாளிகைக்கு சென்றார்.

ஒரு தீவிர விலங்கு பிரியரான மகாராணியார், அவர் தனது குதிரைவண்டி மற்றும் நாய்களை நேசித்தார்.

அவர் இறந்த உடனேயே, ‘ராணியின் நான்கு செல்ல நாய்களை’ யார் பராமரிப்பது என சில ஊடகங்கள் கேள்வி எழுப்பின. விலங்குகள் மீது அவள் காட்டிய கருணை பலரால் மெச்சப்பட்டது,

அவர் இறக்கும் போது, ​​ராணி எலிசபெத் 14 நாடுகளின் அரச தலைவியாக இருந்தார்.

1952 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி முதல் 1972 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி வரை இலங்கையின் ராணியாக இருந்துள்ளார்,

அவர் இறக்கும் போது காமன்வெல்த் தலைவராக இருந்தார் மற்றும் உலகின் மிக விரிவான பேரரசுகளில் ஒன்றை வழிநடத்திய ராணி ஆவார்.

அவர் இரண்டு முறை (1953 மற்றும் 1981) இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

1972 ஆம் ஆண்டு வரை, இலங்கையில் உள்ள மக்கள் பிரித்தானிய கடவுச் சீட்டுக்கு உரிமையுடையவர்களாக இருந்தனர், இது உலகம் முழுவதும் பயணம் செய்யும் போது பெரும் பாக்கியமாக இருந்தது என்று முன்னோர்கள் கூறுகின்றனர்.

அந்த நேரத்தில், ராணிக்கு சாரணர்கள் மற்றும் அரச வழக்கறிஞர்கள் இருந்தனர், ஆனால் இன்று ஜனாதிபதி சாரணர்கள் மற்றும் ஜனாதிபதி வழக்கறிஞர்களாக மாற்றப்பட்டுள்ளது. அதற்குக் காரணம், 1972ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நமது நாடு பிரித்தானிய அரசிடமிருந்து பிரிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் இறுதிச் சடங்குகளும் பல சடங்குகளுக்கு உட்பட்டவை. அதன்படி, ஸ்காட்லாந்தில் உள்ள அரசியின் பூதவுடல் , முதலில் சிறப்பு ரயில் மூலம் லண்டனுக்கு கொண்டு வரப்படும்.

ராணியின் மரணம் குறித்து உயரதிகாரிகளுக்கான அறிவிப்பு பாரம்பரிய வார்த்தையான LONDON BRIDGE HAS FALLEN என வெளியாகியது.

பிரித்தானிய பாராளுமன்றம், வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகை மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனை ஆகியவற்றில் ராணியின் உடலுக்கு இறுதி மரியாதை செய்வது வழமையாகும்.

பின்னர் அரச உடல் வின்ட்சர் கோட்டையில் உள்ள கிங் ஜார்ஜ் VI சேப்பலில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

ராணி எலிசபெத்தின் தந்தை கிங் ஜார்ஜ் VI உட்பட அரச குடும்பத்தாரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அவரும் அடக்கம் செய்யப்படுவார் என தெரிவிக்கிக்கப்படுகிறது . அங்கு அவர் தனது கணவர் இளவரசர் பிலிப்பின் உடலுக்கு அருகில் நித்திய அமைதியுடன் ஓய்வெடுக்க அனுமதிக்கப்படுவார்.

இளவரசர் சார்லஸ் மூன்றாம் சார்லஸாக அரியணையில் அமர்த்தப்பட்டார், அடுத்த கட்டமாக அவரது முடிசூட்டு விழா நடைபெறும்.

அதன்படி, 1952ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவின் தேசிய கீதமான ‘God save the queen’, இனிமேல் ‘God save the king’ என இசைக்கப்படும்.

தொகுப்பு : ஜீவன்

 

 

Leave A Reply

Your email address will not be published.