பல்கலைக்கழக ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, தோனி ஆகியோரின் புகைப்படங்கள்!

பீகார் மாநில பல்கலைக்கழகம் ஒன்றில் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் மகேரந்திர சிங் தோனி, அம்மாநில ஆளுநர் பாகு சவுஹான் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்று பரபரப்பை கிளப்பியுள்ளது.

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் புகழ்பெற்ற லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் மற்றும் அதற்கு கீழ் இயங்கும் கல்லூரிகளில் படிக்கும் மூன்றாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. அதற்கான ஹால்டிக்கெட் சில நாள்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. மாணவர்கள் இணையதளத்தில் இருந்து அதை பதிவிறக்கம் செய்த போது தான் அதிர்ச்சி அளிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் மகேரந்திர சிங் தோனி, அம்மாநில ஆளுநர் பாகு சவுஹான் ஆகியோரின் புகைப்படங்களுடன் ஹால்டிக்கெட் வந்துள்ளது. இது சமூக வலைத்தளங்களிலும் பரவி பரபரப்பை கிளப்பியுள்ளது.

விஷயம் பல்கலைக்கழகத்தின் கவனத்திற்கு வரவே அதன் பதிவாளர் முஷ்தாக் அகமது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “தேர்வுக்கான ஹால்டிக்கெட்டிற்கு புகைப்படங்களை மாணவர்கள் தான் பதிவேற்றம் செய்வார்கள். அதை சரிபார்த்து நிர்வாகம் ஹால்டிக்கெட் வழங்கும். ஏதே சில குறும்புக்கார மாணவர்கள் பிரபலங்களின் புகைப்படங்களை விஷமத்துடன் இவ்வாறு மாற்றி பதிவேற்றம் செய்துள்ளனர். இது சீரியசான விஷயம். உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவுள்ளோம். தேவைப்பட்டால் வழக்கும் பதிவு செய்வோம்” என்றுள்ளார்.

பீகாரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முசாபர்பூரில் உள்ள கல்லூரியில் நடிகர் இம்ரான் ஹாச்மி, நடிகை சன்னி லியோன் உள்ளிட்டோரின் புகைப்படத்துடன் ஹால்டிக்கெட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.