நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை சேர்க்கப்படாத லட்டு பிரசாதமா.. திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை சேர்க்கப்படாத லட்டு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது என்று கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஒரு சில ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்தி தவறு என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை சேர்க்கப்படாத லட்டு வழங்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த செய்தி தவறு என்று அறிவித்துள்ளது தேவஸ்தான நிர்வாகம்.

திருப்பதி கோவிலில் தயார் செய்யப்படும் லட்டுக்கு புவிசார் காப்புரிமை அளிக்கப்பட்டுள்ளது. எனவே லட்டு தயாரிக்க கடலை மாவு, சர்க்கரை, முந்திரி, திராட்சை ஆகியவை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒரே குறிப்பிட்ட அளவில் சேர்த்து அதன் சுவை, மனம்,எடை ஆகியவை மாறாத வகையில் லட்டு தயாரிப்பு நடைபெறுகிறது.

இந்த நிலையில் சர்க்கரை சேர்க்கப்படாத லட்டு என்ற பெயரில் ஒன்றை வழங்கினால் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் புவிசார் உரிமை பற்றி கேள்வி எழும். மேலும் அது வெறும் மாவு உருண்டையாகவே இருக்கும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சர்க்கரை சேர்க்கப்படாத லட்டு வழங்கினால், நாளை வேறு ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து வேறு சில பக்தர்கள் வேறு சில பிரசாதங்களை கேட்பார்கள் அவற்றையும் வழங்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே லட்டு பிரசாதம் மட்டுமே வழங்குவது முறையாக இருக்கும் என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.