வடக்கில் காலாவதியான பைஸர் தடுப்பூசிகளே மாணவர்களுக்கு ஏற்றல்! – வெளியானது அதிர்ச்சித் தகவல்.

வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு காலாவதியான பைஸர் தடுப்பூசிகளே ஏற்றப்படுகின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், சுகாதார அமைச்சின் தடுப்பூசி தொடர்பான ஆலோசனைக் குழுவின் சிபாரிசின் அடிப்படையிலேயே தடுப்பூசி ஏற்றப்படுகின்றது என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

தற்போது வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன. இதன்போது 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் காலாவதியான தடுப்பூசிகளே மாணவர்களுக்கு ஏற்றப்படுகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், காலாவதியான இந்தத் தடுப்பூசிகளை 2022ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரையில் ஏற்றுவதற்கு அதிகாரிகளால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இந்தத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு இந்தத் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன என்றும் தெரியவருகின்றது.

வடக்கின் ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் இந்தத் தடுப்பூசிகளே ஏற்றப்படவுள்ளன. இது தொடர்பாக மாணவர்களுக்கோ, பெற்றோர்களுக்கோ சுகாதாரத் துறையால் எந்த விளக்கமும் இதுவரை வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனிடம் கேட்டபோது,

“இந்தத் தடுப்பூசியே நாடு முழுவதும் ஏற்றப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சின் தடுப்பூசி தொடர்பான ஆலோசனைக் குழுவின் பரிந்துரையுடனேயே காலாவதியான தடுப்பூசியை பயன்படுத்தும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தடுப்பூசிகளை 2022 ஒக்ரோபர் 31 ஆம் திகதி வரை பாவனைக்குட்படுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

“காலாவதியாகி சில மாதங்கள் கடந்த பின்னரான தடுப்பூசிகள் செலுத்தப்படுவதால் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படதா?” என்று அவரிடம் கேட்டபோது, “நாடு முழுவதும் இந்தத் தடுப்பூசியே செலுத்தப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விவரங்களை நீங்கள் சுகாதார அமைச்சிடம் தான் கேட்க வேண்டும்” என்று அவர் மழுப்பலாகப் பதிலளித்தார்.

அதேவேளை, ஏனைய மாகாணங்களில் சிலவற்றில் இந்தத் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும், அதிகாரிகளின் எதிர்ப்பால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது என்று அறியமுடிகின்றது.

Leave A Reply

Your email address will not be published.