லிஸ் ட்ரஸ் பயணிக்க போகும் பாதை ?  : சண் தவராஜா

எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே பிரித்தானியாவின் தலைமை அமைச்சராக லிஸ் ட்ரஸ் அம்மையார் பதவியேற்றுள்ளார்.

பழமைவாதக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அவருக்கு வாக்களித்து அவரைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்தி உள்ளார்கள்.

இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட இருவரில் ஒருவரைத் தெரிவு செய்யும் நிலையில் இருந்த உறுப்பினர்கள், இருவரில் மேனாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸைத் தெரிவு செய்தமை வியப்புக்கு உரிய ஒன்றல்ல. அது எதிர்பார்க்கப்பட்டதே.

பிரித்தானியாவின், 56ஆவது தலைமை அமைச்சரான ட்ரஸ், அந்த நாட்டின் மூன்றாவது பெண் தலைமை அமைச்சருமாவார்.

அவருக்கு முன்னர் ‘இரும்புப் பெண்மணி’ என்ற அடைமொழியைக் கொண்ட மார்கிரட் தாச்சர், தெரேசா மே ஆகியோர் தலைமை அமைச்சுப் பதவியை வகித்துள்ளனர்.

பழமைவாதக் கட்சியின் தலைவரைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பில் கலந்து கொண்ட 1,80,000 சிறப்பு வாக்காளர்களில் 57.4 வீதமானோரின் வாக்குகளை ட்ரஸ் பெற்றுக் கொண்டார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய வம்சாவளி ரிஷி சுனக் 42.6 வீதமான வாக்குகளைப் பெற்றிருந்தார்.

சுனக்கின் இந்திய வம்சாவளியும், அவரது பணக்காரத்தனமான வாழ்க்கை முறைமையுமே, அவர் அதிக வாக்குகளைப் பெறாமல் போனமைக்கான காரணம் என நோக்கர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

சிறப்பு வாக்காளர்களில் அநேகர் முதியவர்கள் என்பதுவும், இளைய தலைமுறையினரில் அநேகர் சுனக்கிற்கே வாக்களித்திருந்தார்கள் என்பதுவும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

போரிஸ் ஜோன்சன் பதவி துறக்கும் நிலை உருவாகி, தலைமைத்துவத்துக்கான போட்டி உருவான போதில், 4ஆம் இடத்தில் இருந்த ட்ரஸ், படிப்படியாக முன்னிலைக்குக் கொண்டு வரப்பட்டதை அனைவரும் அறிவர். அது அவரின் திறமைக்குக் கிடைத்த வெகுமதி அல்ல என்பதையும் உலகறியும்.

பிரித்தானியத் தலைமை அமைச்சருக்கான தெரிவு பற்றி அடுத்த பிரித்தானிய பிரதமர் யார்? என்ற தலைப்பில் யூலை 24ஆம் திகதி இதழில் எழுதிய கட்டுரையில் நான் பின்வருமாறு எதிர்வு கூறியிருந்தமை வாசகர்களுக்கு நினைவு இருக்கக் கூடும்.

உக்ரைன் போர் ஆரம்பமான நாள் முதலாக லிஸ் ட்ரஸ் காட்டிவரும் அதீத ஈடுபாடு இரகசியமான விடயமல்ல. ரஸ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற தனது ஆசையைப் பகிரங்கமாகவே தெரிவித்த அவர், பிரித்தானியப் பிரஜைகள் உக்ரைன் சென்று கூலிப் படையினராகப் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் பகிரங்க அறைகூவல் விடுத்திருந்தார்.

பிரித்தானிய ஆயுதப் படைகளின் தலைமையதிகாரி அண்மையில் விடுத்திருந்த ஒரு அறிக்கை இந்த வேளையில் நினைவு கூரத்தக்கது. பழமைவாதக் கட்சியின் சார்பில் யாரொருவர் தலைமை அமைச்சராக வந்தாலும் உக்ரைன் போர் முக்கியம் என்பதை மறந்துவிடக் கூடாது என அவர் தெரிவித்திருந்தார்.

இதனை வேறு விதமாகப் புரிந்து கொள்வதானால் உக்ரைன் போரை மேலும் கூர்மைப்படுத்தக் கூடிய ஒருவரே தலைமை அமைச்சராக வரவேண்டும் என்பதை அவர் விரும்புகிறார் எனலாம். போர் ஒன்று நடைபெறும் வேளையில் அதனால் இலாபமடையும் ஆயுத வியாபாரிகள் போர் விரைவில் முடிவடைவதை விரும்ப மாட்டார்கள் என்பது சாதாரணமாகப் புரிந்துகொள்ளக் கூடியதே.

எனவே, – இடைப்பட்ட காலத்தில் திடீர் மாற்றங்கள் எதுவும் இடம்பெறாது போனால் – போரை ஊக்குவித்துவரும் லிஸ் ட்ரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது எனலாம்.

தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ட்ரஸ் முன்பே பல்வேறு பணிகள் காத்து நிற்கின்றன. தனக்கான அமைச்சரவையை அமைத்துக் கொண்டுள்ள அவர், அடுத்ததாக தற்போது பிரித்தானியாவில் நிலவும் பொருளாதார நெருக்கடி, பனிக் காலத்தில் எதிர்பார்க்கப்படும் சக்தித் துறை நெருக்கடி என்பவற்றுக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய நிலையில் அவர் உள்ளார். அவற்றை அவர் சமாளிப்பாரா என்பது போகப் போகத் தெரியும்.

ஆனால், அவரது பதவியேற்பை ஒட்டி மேலைநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் அவநம்பிக்கை ஊட்டுவனவாகவே உள்ளன.

உக்ரைன் போரில் ட்ரஸ் கடைப்பிடிக்கும் ரஸ்யா மீதான கடும்போக்கு, சீனாவை எதிரி நாடாக அறிவிக்கும் போக்கு என்பவை மேற்குலக ஊடகங்களின் கொண்டாட்டத்துக்கு உரியவையாக உள்ள போதிலும், அவர் ‘பெரிதும் விரும்பப்படாத’ ஒரு தலைவராகவே கருதப்படுகின்றார் என்பதை உணர்த்துவதாகவே செய்திகள் காட்சியளிக்கின்றன.

மறுபுறம், உள்நாட்டிலும் கூட மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு தலைவராக அவர் இல்லை என்பதும் வெளிப்படையானது. தற்போது பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இறுக்கமான சில நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ள உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. அது மாத்திரமன்றி, கொரோனாப் பெருந்தொற்றுக் காரணமாக சிதைந்துபோன பொருளாதாரத்தை மீட்பதற்கான சிறந்த திட்டம் எதுவும் அவரிடம் இருப்பதாகவும் தெரியவில்லை. தன்னைப் பதவியில் அமத்தியுள்ள பெரு வணிக நிறுவனங்களுக்கான வரிகளைக் குறைக்க உத்தேசித்துள்ள ட்ரஸ், சிறு நிறுவனங்களிடமும், பொது மக்களிடமும் அறவிடப்படும் வரியை உயர்த்த உத்தேசித்துள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Nicola Surgeon

ட்ரஸ் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்பது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஸ்கொட்லாந்தின் முதன்மை அமைச்சர் நிக்கொலா ஸ்ருர்ஜியோன், “அவர் ஸ்கொட்லாந்துக்கு மட்டுமன்றி ஐக்கிய இராச்சியம் முழுமைக்குமே ஒரு பேரிடராக அமையவிருக்கிறார்” என்றார்.

நிக்கொலா ஸ்ருர்ஜியோன் சொல்வது எத்துணை தூரம் யதார்த்தமானது என்பதை விளக்க ஒருசில எடுத்துக்காட்டுகளே போதுமானவை.

கொரோனாப் பெருந்தொற்றுச் சமயத்தில் எடுக்கப்பட்ட உள்ளிருப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்த்தவர் ட்ரஸ். “நான் தலைமை அமைச்சராக இருந்திருந்தால் முடக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவே மாட்டேன். முகக் கவசம் அணிவது கட்டாயமாக இருந்திருக்க மாட்டாது” என்றவர் அவர்.

அது மாத்திரமன்றி, ரஸ்யாவுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் கடந்த மாதம் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட பொழுது, அவ்வாறான ஒரு பாவனை உலகின் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே அழிவைத் தரக் கூடியது எனத் தெரிந்திருந்தும், எந்த விதமான கூச்ச நாச்சமும் இன்றி “நான் அதனைச் செய்வதற்குத் தயார்” எனப் பதிலிறுத்தவர் அவர்.

இவ்வாறான போர் வெறியர் ஒருவரே பிரித்தானியாவுக்குத் தலைமை தாங்கப் பொருத்தமானவர் என மேற்குலகம் நினைப்பதில் தவறென்ன இருக்க முடியும்?

Leave A Reply

Your email address will not be published.