யாழ். பல்கலையிலிருந்து திலீபனின் ஊர்திப் பவனி ஆரம்பம்!

தியாக தீபம் திலீபனின் 35ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்து இன்று ஊர்திப் பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழக பிரதான வளாகத்திலிருந்து இந்த ஊர்திப் பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

‘அகிம்சை நாயகனின் கொள்கையில்’ எனும் தொனிப்பொருளில் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தமிழ்த் தேசத்தின் அங்கீகாரம், இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு, பௌத்த – சிங்கள மயமாக்கலை நிறுத்து முதலிய விடயங்களை வலியுறுத்தி தியாக தீபம் திலீபனின் ஊர்திப் பவனி இன்று முற்பகல் 11 மணிளவில் யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமானது.

தியாக தீபத்தின் நினைவேந்தலின் 11ஆவது நாள் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் அமைக்கப்பட்ட பிரதான நினைவாலயத்தில் இடம்பெற்று ஊர்திப் பவனி ஆரம்பமானது.

திலீபனின் நினைவுருவப் படத்தைத் தாங்கிய ஊர்தியோடு பல்கலைக்கழக மாணவர்கள் சிவப்பு, மஞ்சள் வர்ண எழுச்சிக் கொடிகளைத் தாங்கிய வண்ணம் கால்நடையாகவும், சைக்கிள்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் பேரணியாக வலம் வருகின்றனர்.

ஊர்திப் பவனி வரும் பகுதிகளில் தியாக தீபத்தின் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் பல்கலைக்கழக மாணவர்களால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஊர்திப் பயணிக்கவுள்ளதுடன், நாளை காலை நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தை அது சென்றடையவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.