ரணில் விக்கிரமாதித்தன் , தூதுவரை மீறிச் சென்று வெற்றி பெறுவாரா?

யூஎஸ் எய்ட் தலைவர் சமந்தா பவர் , ஜனாதிபதி ரணிலை சந்திக்க வந்த சமயம் , இலங்கையின் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் சங்கடப்பட்டதாக வார இறுதி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

சமந்தா பவருடனான உத்தியோகபூர்வ சந்திப்பிற்கு முன்னர் , தனியாக நேருக்கு நேர் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் சமந்தா பவருக்கு தெரிவித்த யோசனையே அசௌகரியம் ஏற்பட காரணமாகியதாகவும் , அந்த யோசனையை ஜூலி சுங் எதிர்த்தார் என்றும் , அவர்களது நேருக்கு நேர் சந்திப்பில் தானும் கலந்து கொள்ள வேண்டும் என ஜூலி சுங் தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. ஆனால் வெளிநாட்டு சந்திப்புகளை நடத்தும் போது ரணில் இந்த உத்தியைப் பயன்படுத்துகிறார் என்பது ரணிலின் வெளிநாட்டு உறவு நிபுணர்களுக்குத் தெரியும்.

அதாவது, இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதுவரை புறக்கணித்துவிட்டு, அரசியல் தலைவர்களுடன் வெளிநாடுகளின் வெளிவிவகார அமைச்சுத் தலைவர்களை நேரடியாகக் கையாள்வது ரணிலின் ஒரு வழிமுறை.

ஜூலி சுங்கிற்கும் சமந்தா பவருக்கும் இடையில் மோதலை உருவாக்க , சமந்தா பவரை நேரில் சந்திக்க ரணில் முயற்சி செய்திருக்கலாம்.

இப்படி இலங்கையில் உள்ள தூதுவர்களுடனும் , அந்தத் தூதுவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் அதிகாரிகளுடனும் முரண்பாடுகளை உருவாக்க எண்ணற்ற தடவைகள் ரணில் முயற்சித்துள்ளார் என்பதை பலர் அறிவர்.

நிருபம் சென்

2001ஆம் ஆண்டு ரணில் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் இங்குள்ள இந்தியத் தூதுவராக இருந்தவர் நிருபம் சென். இந்தியத் தூதுவராக இருந்த நிருபம் சென்னை , ரணில் பெரிதாக கணக்கு எடுக்கவில்லை. அப்போதைய இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா மூலம் தூதரைத் தவிர்த்து இந்தியாவை சமாளிக்க முயன்றார். இதற்கு ரணிலின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த மிலிந்த் மொரகொட உதவியாகவிருந்தார்.

ஒஸ்டின் பெர்னாண்டோ

ரணில் அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இது குறித்து தனது நூலில் ஒரு நல்ல கதையை குறிப்பிட்டுள்ளார்.

2003ஆம் ஆண்டு வடக்கில் பலாலி விமான ஓடுபாதையை சீரமைக்க இலங்கை அரசாங்கம் விரும்பியது. அதற்கான கடனை கிறடிட் லைன் மூலம் கொடுக்க இந்தியா தயாராக இருந்தது. இலங்கை நாட்டிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தது.

Milida Moragoda

அப்போது ரணிலின் அரசாங்கம் புலிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இந்தியாவுக்கு பெரிதாக தெளிவில்லாமல் இருந்தது. அப்போதையை அமைதி நடவடிக்கையில் நோர்வேயின் தலையீடு குறித்தும் இந்தியாவுக்கு கேள்விகள் எழுந்தன. இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் மிஸ்ராவின் மூலம் சமாதான முன்னெடுப்புகள் குறித்து இந்தியாவுக்குத் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு இந்தியாவின் ஆட்சேபனை இல்லை என்றும் மிலிந்த மொறகொட , ரணிலிடம் சொன்னார்.

ஆனால் இந்திய உயர்ஸ்தானிகர் நிருபம் சென்னுடன் தொடர்பில் இருந்த ரணில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் சமாதான முன்னெடுப்புகள் தொடர்பில் இந்தியாவுக்கு பிரச்சினை எழுந்து இருப்பதாக ரணிலிடம் தெரிவித்துள்ளனர்.

பலாலி பாதையை சீரமைப்பது தொடர்பில் இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு பிரதானியுடன் கலந்துரையாடிய போது, ​​விமான ஓடு பாதை திருத்தியமைப்பிற்கு கடன் வழங்குவதற்கு பல நிபந்தனைகளை வழங்கியதாக ஒஸ்டின் பெர்னாண்டோ தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் நிருபம் சென்னும் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளித்ததாக ஓஸ்டின் குறிப்பிட்டுள்ளார். அந்த நிபந்தனைகளுக்கு இணங்க முடியாத காரணத்தினால் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதமர் ரணிலிடம் இது குறித்து தெரிவித்த போது, ​​அந்த நிபந்தனைகளுக்கு உடன்பட வேண்டாம் எனவும், பிரதமர் ரணில் , இந்திய பிரதமருடன் பேசி பிரச்சினையை தீர்த்து வைப்பதாக இருவரும் உறுதியளித்ததாகவும் ஒஸ்டின் குறிப்பிடுகின்றார்.

இறுதியில் பலாலி விமான ஓடுபாதை திருத்தம் செய்யப்படவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா , பாதுகாப்பு அமைச்சை கையகப்படுத்தி , ரணிலின் அரசாங்கத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கவிழ்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து இலங்கை நாட்டின் இந்திய தூதுவரைப் புறக்கணித்து, இந்தியப் பிரதமருடன் இணைந்து பிரச்சினைகளைத் தீர்க்கச் சென்று ரணில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினார் என்பதை இந்த சம்பவமே காட்டுகிறது.

1989 இந்திய-இலங்கை ஒப்பந்த  காலத்தின் போது நிருபம் சென் இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றினார். இதனாலேயே நிரூபம் சென்னுக்கு , ரணில் மற்றும் யூ.என்.பி. அரசாங்கத்தின் வெளிநாட்டு உறவுகள் குறித்து நன்கு தெரியும். இது ரணிலுக்கும் தெரியும். அப்போது இந்தியாவுக்கும் ஜே.ஆருக்கும் மட்டுமல்ல , இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முடிவுகளிலும், ஜே.ஆரின் அரசாங்கத்திலும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. அவற்றை இலங்கை அரசு பெரிதாக விரும்பவில்லை. ரணிலும் , நிரூபம் சென் மீது அவ்வளவு பிரியமாக இருக்கவில்லை. இதன் காரணமாக இந்திய அரசிலுள்ள ஒருவரையொருவர் மோத வைப்பது ரணிலின் அன்றைய உத்தியாக இருந்தது. அது வெற்றிபெறாது தோல்வியடைந்தது.

இன்று ஜூலி சாங்கை ரணிலுக்கு பிடிப்பதில்லை. காரணம் அவர் போராட்டகாரர்களை ஆதரிப்பவராக நிற்கிறார். போராட்டத்தை ஒடுக்க வேண்டாம் என்று ரணிலுக்கு , ஜூலி அழுத்தம் கொடுத்தபோது, ​​ரணில் அவர் மீது அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் புகார் அளிக்க விரும்பினார். சமந்தா பவர் , மங்களவின் தோழி. அந்த தொடர்புகள் மூலம் சமந்தாவை அணுகி ஜூலியை ஒழிக்க அல்லது கட்டுப்படுத்த ரணில் முயற்சிக்கிறார். அதுவும் வெற்றிபெறப் போவதில்லை. இப்படியான தோல்வியுற்ற வியூகங்களால் ரணில் அமெரிக்க உறவுகளை குழப்பிக் கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.

வேதாளத்தை தூக்கு சுமக்கும் விக்கிரமாதித்தன் போன்ற ரணிலின் நிலை என்னவாகும் என்பது விரைவில் தெரியும்?

உபுல் ஜோசப் பெர்னாண்டோ
தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.