கொழும்பில் தீ விபத்து : 80 வீடுகள் முற்றாக எரிந்து நாசம் : 220 பேர் இடம்பெயர்வு !

கொழும்பு – பாலத்துறை, கஜிமாவத்தையில் ஏற்பட்ட தீ பரவில் சுமார் 80 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கஜிமாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை(27) மாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து தீயணைப்புப் படையினர், முப்படையினரின் இணைந்து சுமார் 2 மணி நேர போராட்டத்தில் தீயை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். தீயை கட்டுப்படுத்த 12 க்கும் மேற்பட்ட தீயணைப்பு இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

இந்த தீ விபத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லையென பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இதேவேளை தீ விபத்தையடுத்து வீடுகளை இழந்த 220 பேர் தற்போது இடம்பெயர்ந்து வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பாலத்துறை கஜிமாவத்தை குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.