தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி.

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் 20 ஓவர் தொடரில் திருவனந்தபுரத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

இந்திய அணி சொந்த மண்ணில் இதுவரை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றதில்லை. இந்த நிலைமையை மாற்றி அந்த அணிக்கு எதிராக முதல்முறையாக 20 தொடரை கைப்பற்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

தென்ஆப்பிரிக்க அணி முந்தைய ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பியது. அந்த அணியின் பேட்டிங்கில் கேப்டன் பவுமா, குயின்டான் டி காக், ரோசவ், மார்க்ராம், டேவிட் மில்லர் என்று திறமையான வீரர்கள் உள்ளனர். பந்து வீச்சில் ரபடா, அன்ரிச் நோர்டியா, தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் மிரட்டல் அளிக்கக்கூடியவர்கள். இந்த ஆட்டத்தில் தோற்றால் தென்ஆப்பிரிக்க அணி தொடரை இழந்து விடும். எனவே அந்த அணியினர் பதிலடி கொடுத்து தொடரை இழக்காமல் இருக்க கடுமையாக போராடுவார்கள். அதேநேரத்தில் இந்திய அணி தொடரை வெல்ல வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

Leave A Reply

Your email address will not be published.