மக்களிடம் கண்ணியமாக பேச வேண்டும்.. மீறினால் நடவடிக்கை.. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,எம்.பி.க்களுக்கு மு.க. ஸ்டாலின் கண்டிப்பு..!

மக்களிடம் கண்ணியமாக பேச வேண்டும் என திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை விளைவதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள முடியாத பொல்லாங்கு எண்ணம் கொண்டோர், நமக்கு எதிராகச் சிறு துரும்பையும் பெரும் தூணாக்க முடியுமா எனத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறு துரும்புக்கு மட்டுமல்ல, தூசுக்கும்கூட இடம் கொடுக்காத வகையில், நாம் கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ஏற்கனவே செப்டம்பர் 26-ஆம் நாளன்று ஓர் அறிக்கை வாயிலாக அன்புக்கட்டளை விடுத்திருக்கிறேன். அதனை மீண்டும் நினைவூட்டுகிறேன். எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள். நம்மிடமிருந்து வெளிப்படும் சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள். மற்றவர்களைவிட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிகளவில் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள். அவர்கள் இன்னும் கூடுதல் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது. அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன் என்பதைக் கண்டிப்புடன் நினைவூட்டிட விரும்புகிறேன். அரும்பாடுபட்டு அமைந்துள்ள மக்கள் நல ஆட்சிக்கு, அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கும் எதிரிகளுக்கு அருமை உடன்பிறப்புகள் யாரும் எள்ளளவும் துணைபோக மாட்டீர்கள் என உறுதியாக நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.