பூஜை செய்த புரோகிதரின் காதை கடித்த இளைஞர் – திருமணம் கைக்கூடாத விரக்தியில் வெறிச்செயல்

திருமணத்திற்காக செய்த பூஜை பலன் அளிக்காததால் தந்தையும் மகனும் புரோஹிதரை அடித்து தாக்கிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சத்திய நாராயணா பூஜை என்ற பூஜை சடங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும். எந்தவொரு நல்ல காரியங்களை ஒட்டியும் இந்த பூஜையானது செய்யப்படும். அவ்வாறு மத்திய பிரதேச மாநிலத்தில் லக்ஷ்மி காந்த் சர்மா என்பவர் தனது வீட்டில் இந்த பூஜையை அன்மையில் நடத்தியுள்ளார்.

இவருக்கு விபுல் மற்றும் அருண் என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் நீண்ட காலம் தள்ளிச் சென்றதால், விரைவாக திருமணம் நடக்க வேண்டும் என்ற நோக்கில் ராஜஸ்தானின் கோட்டா என்ற பகுதியைச் சேர்ந்த குஞ்ச்பீகாரி சர்மா புரோஹிதரை அழைத்து என்பவரை தனது வீட்டில் சத்திய நாராயணா பூஜையை இவர் செய்துள்ளார்.

இந்நிலையில் பூஜை நடந்து பல நாள்கள் ஆகியும் இரு பிள்ளைகளுக்கும் திருமண வரன் கைகூடவில்லை. எனவே, ஆத்திரமடைந்த லக்ஷ்மி காந்த் சர்மா மற்றும் அவரது இரு மகன்கள் அருண், விபுல் பூஜை செய்து வைத்த புரோஹிதர் குஞ்ச்பீகாரி வீட்டிற்கு சென்று அவரை கடுமையாக அடித்து தாக்கியுள்ளனர்.

இவர் பூஜையை ஒழுங்காக செய்யாததால் தான் பலன் ஒழுங்காக கிடைக்கவில்லை என்று கூறி இதை அவர்கள் செய்துள்ளனர். அத்துடன், இளைய மகனான விபுல் ஆத்திரத்தில் அந்த புரோஹிதரின் காதை கடித்துள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் புரோஹிதரை காப்பாற்றிய நிலையில், காவல் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டு தாக்குதல் நடத்திய அப்பாவும், இரு மகன்களும் கைதாகியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.