நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்! – கஜேந்திரகுமார் கோரிக்கை.

“பிரதமர், ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை பதவி விலகிய பின்னர் நாடாளுமன்றத்தில் மக்களின் விருப்பம் பிரதிபலிக்கப்படவில்லை. எனவே, நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (05) நடைபெற்ற நிலையியல் கட்டளைகள் திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரு கட்சியைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் நாடாளுமன்றத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டையே கொண்டுள்ளேன். இதில் குழு முறைமைகள் பலப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது.

இந்தக் குழுக்களின் ஊடாகவே முக்கியமான வேலைகளை செயற்படுத்த முடியுமாக இருக்கும்.

நிலையியல் கட்டளை திருத்தங்கள் தொடர்பான விடயங்களில் அதனை நடைமுறை ரீதியில் திருத்த வேண்டும்.

நாடாளுமன்றக் குழுக்கள், நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையாக இருக்க வேண்டும்.

அத்துடன் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படுகின்றது.

ஒரு வருடமாக நான் அந்தக் கூட்டங்களில் நிராகரிக்கப்பட்டேன். எங்கள் கட்சி சார்பில் இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், எங்களுக்கு அந்தக் குழுவில் இடமளிக்கப்பட்டிருக்கவில்லை.

இதேவேளை, நிதி குழுக்கள் மற்றும் சட்டவாக்கம் தொடர்பான குழுக்களில் நாங்கள் அங்கம் வகிக்க வேண்டும்.
அத்துடன் நேர ஒதுக்கீட்டு விடயத்தில் நான் கட்சித் தலைவர். அதன்படி பேசுவதற்கு நேரம் வழங்கப்பட வேண்டும்.

இதனால் குறைந்தளவு நேரமாவது வழங்க வேண்டும். எங்களின் கட்சிகள் போன்ற சிறிய கட்சிகள் மதிய நேரத்தின் பின்னர் பேசும் போது 12 நிமிடங்களாவது வழங்க வேண்டும்.

இதேவேளை, அரசமைப்பு ரீதியில் நாடாளுமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது. அரசமைப்பு ரீதியில் எந்தவித தடைகளும் இருக்கக் கூடாது.

முன்னைய பிரமரும், ஜனாதிபதியும், அமைச்சரவையும் பதவி விலகிய பின்னர் இந்தச் சபை மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கவில்லை என்பதைக் கூறிக்கொள்கின்றேன்.

எவ்வாறாயினும் இந்த நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். இப்போதும் மக்களின் அந்த விருப்பம் நிராகரிக்கப்படுகின்றது.

இதேவேளை, குருந்தூர்மலை என்பது தமிழ் மக்கள் வழிபாட்டில் ஈடுபடும் ஒரு புராதன இடமாகும். தொல்பொருள் திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த விதுர விக்கிரமநாயக்க அங்கு அடிக்கல் ஒன்றை நாட்டியிருந்தார்.

அந்த இடத்தைப் பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு முயற்சித்துள்ளனர். அந்த இடத்தை அழித்துவிட்டு அவ்வாறு விகாரையாக மாற்ற முடியுமா? அதற்கு யார் அனுமதி கொடுத்தது? குறித்த விடயத்தில் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொல்பொருள் திணைக்களம் ஓர் இனவாதத் திணைக்களமாகக் காணப்படுகின்றது. தொழிற்படும் விதமும் அப்படித்தான் உள்ளது. பௌத்த மதகுருவும் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார்.

உத்தரவாதம் உரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போதும், தொடர்ச்சியாக இனவாத நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.