தோல்வியடைந்தாலும் ரணில் சிறந்த தலைவர்! – ஏற்றுக்கொள்கின்றது முன்னணி.

“நாட்டில் இறுதியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான தோல்வியைச் சந்தித்துள்ள போதிலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறந்த தலைவர் என்பதை எமது கட்சி ஏற்றுக்கொள்கின்றது.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்கள் ஆணைக்குப் புறம்பாகவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை நாடாளுமன்றம் ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டுள்ளது.

மக்கள் தாம் வழங்கிய ஆணையை மீளப்பெற்றதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் பதவியிலிருந்து விலகுவதற்கு நேரிட்டது.

இதையடுத்து மக்களால் நிராகரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இறுதியாக நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கு முன்னதாக இடம்பெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த பொதுத்தேர்தலில் குறைவான வாக்குகளையே பெற்றுக்கொண்டார்.

எனவே, பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்ட வேண்டுமாயின் புதிய தேர்தல் ஒன்றின் வாயிலாக மக்களின் புதிய ஆணையைப் பெறவேண்டும்.

தேர்தல் ஒன்றின் வாயிலாக ஜனாநாயகத்தை உறுதிப்படுத்தி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தையே சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.