திலீபனின் நினைவேந்தல் படங்கள்: சிறிதரன் எம்.பியின் ‘பேஸ்புக்’ முடக்கம்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பான புகைப்படங்களையும் செய்திகளையும் பதிவேற்றம் செய்மைக்காக 20.09.2022 ஆம் திகதியிலிருந்து 90 நாட்களுக்கு இயங்க முடியாதவாறு தனது முகநூல் (பேஸ்புக்) முடக்கப்பட்டுள்ளதைச் சபையின் கவனத்துக்கு கொண்டு வந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07) இரண்டாவது நாளாக நடைபெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்படி விடயத்தைச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்த அவர் மேலும் கூறுகையில்,

“எனது சொந்தப் பெயரில் இயங்கிவரும் எனது தனிப்பட்ட முகநூல் கணக்கில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பான புகைப்படங்களையும் செய்திகளையும் பதிவேற்றம் செய்மைக்காக 20.09.2022 ஆம் திகதியிலிருந்து 90 நாட்களுக்கு இயங்க முடியாதவாறு எனது முகநூல் முடக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் நிலைமாறு கால நீதி பொறிமுறையின் அடிப்படையில் வணக்க முறைகளுக்கு அனுமதி உண்டு.

எனவே, அதனை வழங்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் கேட்டதற்கு இணங்கவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முன்னாள் ஜனதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இடையில் 07.11.2015ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின் போதும் இந்த விடயம் ஆராயப்பட்டு வணக்கத்துக்குத் தடையில்லை என்ற அனுமதி வழங்கப்பட்ட நிலையிலும் 03.08.2022 ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரது ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டு அதன்போதும் வணக்க நிகழ்வுகளுக்கு இந்த நாட்டில் தடையில்லை என்று அவரால் தெரிவிக்கப்பட்டு வணக்க நிகழ்வுகள் அனுமதியோடு இந்த நாட்டில் நடக்கும் நிலையிலும் அத்தகைய செய்திகள், படங்களைப் பகிர்ந்தமைக்காக என்னுடையதும், என் போன்ற பலரினதும் முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளமை எமது கருத்துச் சுதந்திரத்தைக் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

முகநூலானது எமது மன உணர்வுகளை வெளிப்படுத்தும் பொது வெளி ஊடகமாகப் பார்க்கப்பட்ட நிலையில் இன்று அரச சார்பான ஊடகமொன்றாகவே பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, எனது முகநூல் முடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கடந்த 22 ஆம் திகதி முகநூல் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடத்தலைவர் அபயரத்னவுக்கு என்னால் மின்னஞ்சல் மூலம் கோரிக்கை முன்வைக்கப்பட்டும் இன்று வரையில் அது தொடர்பில் எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை” – என்றார்.

இதற்கு இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் பதிலளிக்கையில்,

“முகநூலுக்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பு இல்லை. அது வெளிநாட்டு நிறுவனம். எனவே இது சர்வதேசத்தின் தடையே தவிர எமது தடை அல்ல” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.