இராணுவ ரீதியாக மட்டுமன்றி உணவு, பொருளாதார ரீதியிலும் பாதுகாக்கப்பட வேண்டும்! – ஜனாதிபதி தெரிவிப்பு.

நாட்டின் பாதுகாப்பு இராணுவத்தில் மட்டுமன்றி உணவு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பிலும் தங்கியிருக்கின்றது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் போஷணையை உறுதி செய்யும் நிகழ்ச்சி தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

உணவு பாதுகாப்பு மற்றும் போஷணையை உறுதி செய்யும் நிகழ்ச்சியை நடைமுறைப்படுத்தும்போது அரச பொறிமுறையில் ஏற்பட்ட வீழ்ச்சிக் காரணமாக ஏதேனும் பிரச்சினைகள் உருவாகுமாயின் அதனைச் சரிசெய்வதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் தலையிடுவதற்குத் தயார் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சித் திட்டத்துக்குக் கூடாக விவசாயத்தை நவீனமயப்படுத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை இயற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

‘எந்தவொரு பிரஜையும் உணவின்றி பசியால் வாடக்கூடாது’ என்ற தொனிப்பொருளில் உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்வதற்கு கிராமிய பொருளாதார மேம்பாட்டு மையத்தை பலப்படுத்தும் பல் துறைகளின் ஒன்றிணைந்த பொறிமுறையொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அண்மையில் நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அந்த வேலைத்திட்டத்தின் மாவட்ட மட்ட முன்னேற்றம் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் கிராம மட்டத்தில் கிராமிய பொருளாதார மேம்பாட்டுக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது எனவும், உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்வதற்குப் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ற வகையில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் தடைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, எரிபொருள் மற்றும் தேவையான உரத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும், காணிப் பிரச்சினை, விதைப் பற்றாக்குறை, வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் மாவட்ட செயலாளர்களால் முன்வைக்கப்பட்ட முன்னேற்றங்கள் குறித்து அவதானம் செலுத்திய ஜனாதிபதி, உணவுப் பாதுகாப்பை உருவாக்குவதற்கும், கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்படும் பயிர்ச் செய்கைகளைத் தனித்தனியாக இனங்காணுவதற்குமென உணவுப் பற்றாக்குறை நிலவுகின்ற பிரதேசங்களை இனங்கண்டு அது தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

இந்தத் தகவல்களின் அடிப்படையில் மாவட்டம் தோறும் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் உணவு வங்கி மற்றும் சமூக சமையலறை ஆகிய வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தத் திட்டமிடுமாறும் தெரிவிக்கப்பட்டது.

அரச சேவையில் தற்போது தேவைக்கு அதிகமானவர்கள் இருப்பதால் அவர்கள் அனைவரையும் இந்த வேலைத்திட்டத்தில் இணைத்துக் தொடர்பில் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, முப்படையினர், சிவில் பாதுகாப்புப் படையினர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பையும் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

2023ஆம் ஆண்டு வரை இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து அமுல்படுத்துமாறும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உலகப் பொருளாதார நெருக்கடிக்குத் தயாராகுவதற்கும் மக்களின் போஷாக்குத் தேவையை உறுதிப்படுத்துவதற்கும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

மூன்று வாரங்களின் பின்னர், வாரத்துக்கு ஒருமுறை இந்த வேலைத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன, புதிதாக பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றவர்களுக்கு காணிகள் வழங்குவதை துரிதப்படுத்தல் மற்றும் அதற்காக முறையான பொறிமுறையைப் பின்பற்றுவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று எதிர்வரும் மழைக்காலம் புதிய பயிர்ச் செய்கைக்குப் பொருத்தமாக உள்ளதால், தாமதமின்றி பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கு கிராம மட்ட்த்தில் மக்களைத் தெளிவூட்டுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் பிரதமர் இங்கு விளக்கமளித்தார்.

அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி. சுரேன் படகொட மற்றும் துறைசார் அமைச்சுகளின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.