22 குறித்து அரச தரப்புக்குள் இழுபறி ! முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது!

இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பில் நேற்று (17) மாலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்ட போதிலும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என அறியமுடிகின்றது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அந்தக் கருத்துக்களை வெளியிட்டதன் பின்னர் அரசியல் வரலாறு தொடர்பில் ஜனாதிபதி நீண்ட விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக ஜே.ஆர். ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட விதம், அரசியலமைப்புத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட விதம், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்ட விதம் என்பன தொடர்பில் ஜனாதிபதி நீண்ட விளக்கமளித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொஹொட்டுவவில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 ஆவது திருத்தத்திற்கு எதிராக கருத்து வெளியிட்ட போதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெறுவதற்கு இந்த அரசியலமைப்பு திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அப்போது காமினி லொகுகே இரட்டைக் குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பிய போது , அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, ‘இவ்வளவு காலம் இதைப் பற்றி பேசாமல் மௌனமாக இருந்தேன். இந்த இரட்டைக் குடியுரிமையை நான் முன்மொழியவில்லை. நான் அதை கொண்டுவரவுமில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் காலத்தில் இது மேற்கொள்ளப்பட்டது. அதுதான் எனக்கு தேவையில்லாத ஒன்று .’ என்று கூறினார்

பின்னர் மீண்டும் 22 வந்தால் பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என உத்தரவாதமளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த தெரிவித்துள்ளார்.

அதற்கு சிரித்துக்கொண்ட ஜனாதிபதி, மகிந்தானந்த மீண்டும் வந்து வந்து வெற்றிலை பாக்கு வைத்து கும்பிட்டு கேட்டாலும், குறித்த நேரம் முடியும் வரை பாராளுமன்றத்தை கலைக்க மாட்டோம் என பதிலுக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 22ஆவது திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்று இல்லாமலே நேற்றைய கூட்டம் நிறைவடைந்துள்ளதாக அறியமுடிகிறது.

Leave A Reply

Your email address will not be published.