முழுக்க முழுக்க இந்திக்காகவே துடிக்கிறது மத்திய அரசின் இதயம் – மு.க.ஸ்டாலின்

சட்டபேரவை இன்றும் நாளையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்தி திணிப்பிற்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். அப்போது அவர், பாஜக அரசு மாநில மொழிகளை வஞ்சிக்கிறது என குற்றம்சாட்டினார்.

மேலும் அவர், “1938 ஆம் ஆண்டு முதல் இந்தி மொழி திணிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது, நாமும் எதிர்த்து வருகிறோம். ஆளும் பா.ஜ.க அரசு இந்தி திணிப்பை ஆட்சி தொடங்கி கல்வி மூலமாக ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே பண்பாடு என்கிற அடிப்படையில் மற்ற தேசிய இனங்களை மத்திய அரசு அழிக்க பார்க்கிறது.

விடுதலை பெற்ற இந்தியா ஓராண்டு கூட ஒற்றுமையாக இருக்காது என வெளிநாடு பத்திரிகைகள் தெரிவித்துள்ளது. அனைத்து மொழியினரும் சம உணர்வோடு வாழ்ந்து வருகின்றனர். இந்தியா மத சார்பற்ற நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்க கூடாது. இந்தி பேசாத மாநிலங்களில், ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் என பண்டிதர் நேரு தெரிவித்தார். மற்ற மாநில மொழிகளை மத்திய பா.ஜ.க கொண்டாடுவதில்லை. இந்தியை அலுவல் மொழியாக மட்டுமல்ல மேலாதிக்கம் செலுத்தும் மொழியாக பா.ஜ.க செயல்படுத்தி வருகிறது.

மத்திய கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி இருக்க வேண்டும் எனவும், தேர்வாளர்களின் இந்தி மொழி அறிவை உறுதி செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளார்கள் எனவும் தெரிகிறது.

இந்தியா முழுவதும் இந்தியை வலுப்படுத்த துடிக்கிறார்கள். முழுக்க முழுக்க இந்திக்காகவே துடிக்கிறது மத்திய அரசின் இதயம். தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற வழிக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். இந்திக்கு தாய்ப்பாலும் மற்ற மொழிகளுக்கு கள்ளிபாலும் அளிக்கிறது..மத்திய பா.ஜ.க அரசு” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.