தைப்பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை! – மனோவிடம் ஜனாதிபதி உறுதி.

“தீபாவளியில் விடுவிக்கப்பட்டதைப் போல், தைப்பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக என்னிடம் நேரில் தெரிவித்தார் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற தீபாவளி நிகழ்வில் நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு பற்றியும், கொழும்பில் பொலிஸ் பதிவு பற்றியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உரையாடினோம்.

பொலிஸ் பதிவு பற்றி மீண்டும் ஒருமுறை ஐ.ஜிக்குப் பணிப்பதாக ஜனாதிபதி சொன்னார்.

தீபாவளியில் விடுவிக்கப்பட்டதைப் போல், தைப்பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி மேலும் சொன்னார்.

அருகிலிருந்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாகல, யோகராஜன் ஆகியோரும் சாதகமாகக் கருத்து பகிர்ந்தனர்.

மலையக மக்கள் மத்தியிலான பெருந்தோட்டப் பிரிவினர் பற்றி நான் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணை பற்றி ஜனாதிபதி அறிந்திருந்தார்.

பெருந்தோட்டப் பகுதிகளிலேயே 51 வீத உணவின்மை பிரச்சினை காணப்படுகின்றது என்று கூறினேன். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய, செயலணி ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரினேன். ஜனாதிபதி கொள்கை ரீதியாக உடன்பட்டார்” – என்றார்.

இதேவேளை, அரசமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறையிலுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு, தீபாவளித் தினமான நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.