369 அடியில் உலகின் மிக உயரமான சிவன் சிலை..! – ராஜஸ்தானில் திறப்பு

369 அடி உயரம் கொண்ட உலகின் மிகப் பெரிய சிவன் சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமனந்த் மாவட்டத்தில் உள்ள நாத் துவாரா என்ற இடத்தில் இந்த சிலை அமைந்துள்ளது. விஸ்வாஸ் ஸ்வரூபம் எனப் பெயரிடப்பட்ட இந்த சிலையை ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிபி ஜோஷி, எதிர்க்கட்சி தலைவர் குலாப் சந்த் கடாரியா, யோகா குரு ராம்தேவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தத் பாதம் சன்ஸ்தன் என்ற அமைப்பு இந்த சிலையை கட்டியுள்ளது. சுமார் 3,000 டன் உருக்கு, 2.5 லட்சம் க்யூபிக் டன் கான்க்ரீட் மற்றும் மணல் ஆகியவற்றின் மூலம் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட சிலையை 20 கிமீ தொலைவில் இருந்து கூட காண இயலும். இந்த சிலை 10 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டில் அன்றும் முதலமைச்சராக இருந்த அசோக் கெலாட் தான் இந்த சிலை கட்டுமான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

தியானம் செய்யும் கோலத்தில் சிவன் உள்ளார். இரவிலும் சிலை சிறப்பாக தோற்றமளிக்கும் விதமாக மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவை சிறப்பிக்கும் விதமாக அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கி நவம்பர் 6ஆம் தேதி வரை ஒன்பது நாள்கள் ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.