நாட்டு மக்களுக்குத் துரோகமிழைக்கும் அரச தலைவர்கள்! – பேராயர் குற்றச்சாட்டு.

“நாட்டு மக்களே வாக்களித்துத் தேர்வு செய்த அரச தலைவர்கள் மக்களுக்குத் துரோகமிழைக்கின்றனர். அவர்களே நாட்டைக் காட்டிக் கொடுக்கின்றனர்.”

– இவ்வாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் தலைவர்கள் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து உணர்வுபூர்வமாகச் சிந்திப்பதில்லை.

இதன் காரணமாகவே சர்வதேச நாடுகளிடம் எங்களின் இயலாமையைக் கூறி கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

முறையற்ற கொள்கை தீர்மானங்கள் காரணமாக நாடு பாரியளவில் பின்னோக்கிச் சென்றுள்ளது. இந்தநிலைமை காரணமாக 1978 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து நாடு மோசமான நிலைமைக்கே சென்று கொண்டிருக்கின்றது.

சட்டம் என்ற கட்டமைப்பு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. நாங்கள் சுதந்திரமாக இருக்கின்றோமா? இந்தியாவுக்கும், சீனாவுக்கு, அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அடிபணிந்து அவர்களிடம் கையெந்துகின்றோம்.

அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு தலைசாய்த்து இந்த நாட்டை எவ்வாறான நிலைமைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.

இதற்கு முழுமையான பொறுப்பை அரைப் போத்தல் சாராயத்துக்கும், 500 ரூபாய்க்கும் வாக்குகளை விற்பனை செய்த அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நிர்வாகம் செய்ய முடியாதவர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும். அரசமைப்பு பரிந்துரையை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்தார். அந்தக் குழு நாட்டில் உள்ள முக்கிய தரப்பினர் யாரிடமும் சென்று பரிந்துரைகளைப் பெறவில்லை.

அரசமைப்பு திருத்த பரிந்துரை குழுவினர் தன்னிச்சையாகத் தயாரித்த அறிக்கையை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் எதிர்காலம் அதள பாதாளத்துக்குச் செல்லும் என்பது திண்ணம்.

அந்த அரசமைப்பு பரிந்துரையின்படி யாரேனும் ஒருவர், அரசுக்கு எதிராகவோ, அரச நிறுவனம் ஒன்றுக்கு எதிராகவோ, வெளிநாட்டு அரச தலைவர், ஐக்கிய நாடுகள் சபை அல்லது அது சார்ந்த அமைப்புகளிடம் முறைப்பாடு செய்தால் அவரின் குடியுரிமையை 20 வருடங்களுக்குக் குறையாமல் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். முதுகெலும்புடன் செயற்பட வேண்டும் என்று அரசை வலியுறுத்துகின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.