ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி விலகல்!

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவிற்குச் செயல்படாமல் தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது!

இலங்கை வெஸ்ட் இண்டீஸ் போன்ற பெரிய அணிகள் தகுதி சுற்றில் விளையாடின. ஆனால் ஆப்கானிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்க, பிரதான சுற்றில் அயர்லாந்து அணி இங்கிலாந்து அணியையும், ஜிம்பாப்வே பாகிஸ்தான் அணியையும் வென்று அதிர்ச்சி அளித்து இருந்தன.

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி இந்த முறை ஒரு வெற்றி கூட பெறாமல் இந்த டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறி இருக்கிறது

இந்த தோல்வியால் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் மூத்த வீரர் முகமது நபி தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார்.

இது தொடர்பாக முகமது நபி தனது அறிக்கையில் ” எங்களுடைய டி20 உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த முடிவை நாங்களும் எங்களது ஆதரவாளர்களும் எதிர்பார்க்கவில்லை. தொடரின் முடிவு உங்களை எப்படி அதிர்ச்சி அடைய வைத்துள்ளதோ எங்களுக்கும் அப்படியே இருக்கிறது.

கடந்த ஒரு வருடமாக ஒரு பெரிய தொடருக்கு ஒரு அணியை எப்படி தயார்படுத்த வேண்டும் என்று ஒரு கேப்டன் விரும்புவாரோ அப்படி எங்கள் அணி தயார்படுத்தப்படவில்லை. அணி நிர்வாகம் தேர்வு குழு மற்றும் நான் மூவரும் ஒரே பாதையில் இல்லை. இது அணியின் சமநிலையில் தாக்கத்தை உருவாக்கியது ” என்று கூறியவர்…

மேலும் தொடர்ந்து” எனவே உரிய மரியாதையுடன் உடனடியாக ஒரு கேப்டனாக இருந்து விலகுவதாகவும், நிர்வாகத்திற்கும் அணிக்கும் தேவைப்படும் பொழுது ஒரு வீரராக நான் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

மழையால் போட்டி பாதிக்கப்பட்டாலும் மைதானத்திற்கு வந்த உங்களுக்கும், உலக அளவில் எங்களுக்கு ஆதரவு அளித்த ஒவ்வொருவருக்கும், என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

உங்கள் மீதான அன்பு எங்களுக்கு நிறையவே இருக்கிறது. ஆப்கானிஸ்தான் வாழ்க! அன்புடன் முகமது நபி!” என்று அதில் தெரிவித்திருக்கிறார்!

Leave A Reply

Your email address will not be published.