சமஷ்டி முறைத் தீர்வு என்பதில் தமிழ்த் தலைமைகள் ஒற்றுமை! – நிமாலுக்குச் சுமந்திரன் பதிலடி.

“வடக்கு, கிழக்குத் தமிழர்களின் தலைவர்கள் தங்களுக்குள் கட்சிகள், அணிகளாகப் பிரிந்து நின்றாலும், தேசிய இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வே ஒரே வழி என்பதில் மிக உறுதியாகவும், ஒருமித்த நிலைப்பாட்டிலும் உள்ளனர். எனவே, தமிழ்த் தலைவர்கள் பிளவுபட்டிருக்கின்றார்கள் என்று சாக்குப் போக்குக் கூறி, சமாளிப்பதை விடுத்து, சமஷ்டித் தீர்வுக்கு வழி பாருங்கள்.”

இப்படி அரசின் மூத்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு பதிலடி கொடுத்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.

‘பிளவு பட்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஓரணியில் இணைந்தால்தான் அரசுடன் தீர்வுக்காகத் திறந்த மனதுடன் பேச முடியும்’ என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்த கருத்துக்கு, தற்போது நேபாளத்தில் தங்கி உள்ள எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. அங்கிருந்து, தமது பிரதிபலிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

”தமிழ்த் தலைமைகள் வெவ்வேறு கட்சிகளில் வெவ்வேறாகப் பிரிந்து நிற்கலாம். அவர்களின் அணுகுமுறைகள், போக்குகள் வேறுபடலாம். ஆனால், தேசிய இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலேயே தீர்வு என்பதில் அவர்கள் அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளனர்.

ஆகவே தமிழ் தலைமைகளிடையே பிளவு, வேறுபாடு, கருத்து முரண்பாடு, குத்துவெட்டு என்று சாக்குப் போக்குச் சொல்லி விடயத்தைச் சமாளிப்பதை விடுத்து, தமிழ் தலைமைகளின் இந்த ஒன்றுபட்ட நிலைப்பாட்டை கவனத்தில் எடுத்து, அதில் பொதிந்துள்ள நீதி, நியாயத்தைப் புரிந்து கொண்டு, விரைந்த தீர்வுக்கு முன்வாருங்கள்! காலத்தை இழுத்தடித்துச் சாக்குப் போக்குக் கூறிச் சமாளிப்பதை நிறுத்துங்கள்!!” – என்று குறிப்பிட்டார் சுமந்திரன் எம்.பி.

Leave A Reply

Your email address will not be published.