ரஷியா படையெடுப்புக்கு எதிராக உக்ரைனுக்கு, அமெரிக்கா ஜெர்மனி தொடர்ந்து ஆதரவு.

ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்ஸ் சமீபத்தில் சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்துப் பேசினார். 3 ஆண்டுகளில் சீனாவுக்கு பயணம் செய்த ஜி7 நாடுகளின் முதல் தலைவர் என்ற வகையில் இந்த சந்திப்பு அமைந்தது.

அதன்பிறகு அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடந்த சந்திப்பின்போது ரஷியாவின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இரு நாட்டு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். ரஷியா போரை நிறுத்த சீனா வலியுறுத்த வேண்டும் என ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்ஸ் ஜின்பிங்கிடம் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்ஸ் இருவரும் தொலைபேசி மூலம் பேசினார்கள். அப்போது சீன பயணம், ரஷிய விவகாரம் போன்றவை பற்றி அதிபர் ஜோ பைடனிடம் ஓலப் பகிர்ந்து கொண்டார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஷியாவின் படையெடுப்புக்கு எதிராக உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பது என்ற உறுதியுடன் இருக்கிறோம்.

உக்ரைன் நாடு தன்னை தற்காத்துக் கொள்வதற்கு ஏற்ப பொருளாதாரம், மனித நேயம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த ஆதரவு ஆகியவற்றை அளிப்பதில் உறுதியுடன் இருக்கிறோம் என தெரிவித்துள்ளது. மேலும், ரஷியாவின் சமீபத்திய அணு ஆயுத மிரட்டல்கள் பொறுப்பற்ற தன்மை என இரு தலைவர்களும் பேசும்போது ஒப்புக் கொண்டுள்ளனர்.

விதிகளின்படி சர்வதேச நடைமுறை, மனித உரிமைகள் மற்றும் முறையான வர்த்தக நடைமுறைகள் ஆகிய வற்றை தொடர்ந்து பின்பற்றுவதில் பொறுப்புடன் செயலாற்றுவதற்கான பகிர்தலையும் இரு நாட்டு தலைவர்களும் உறுதி செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.