அரசியல் தீர்வுடன் சேர்த்தேதான் பொருளாதாரத் தீர்வும் சாத்தியம்!

“நாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று கிட்டினால் மட்டுமே அதனோடு சேர்ந்து பொருளாதாரத் தீர்வும் சாத்தியமாகும்.”

இவ்வாறு தம்மைச் சந்தித்த தமிழ்க் கனேடிய முதலீட்டாளர்களுக்கு விளக்கம் அளித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி.

நேற்று மாலை கொழும்பில் உள்ள சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சில தமிழ் கனேடிய முதலீட்டாளர்கள் அந்த நாட்டின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சம்பந்தனைச் சந்தித்து உரையாடினர்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் பங்குபற்றினர்.

இலங்கையில் தமிழ் கனேடிய புலம்பெயர் மக்கள் முதலீடு செய்ய எடுத்த முடிவை சம்பந்தன் பாராட்டி, வரவேற்றார்.

”நாட்டுக்கும் தமிழர் தேசத்துக்கும் முதலீடுகள் அவசியம். ஆகவே இந்த முதலீடுகள் தமிழர் தாயகத்துக்கும் வரப் பிரசாதம்தான். இதன் மூலம் எமது தமிழர் தாயகத்துக்கும் விருத்தியும், எமது மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிட்டும். ஆனாலும், நாட்டின் பொருளாதார முயற்சி என்பது வெறுமனே வெளிநாட்டு முதலீடுகள் மூலம் மட்டும் எட்டப்பட்டு விட முடியாது.

நாடு தன்னை அபிவிருத்தி செய்வதற்கான சூழமைவு இங்கு ஏற்பட வேண்டும். தேசிய இனப் பிரச்சினையை மோசமாக கையாண்டதன் விளைவுதான் இந்த பொருளாதார பிரச்சினை; நெருக்கடி.

ஆகவே, இதிலிருந்து மீள்வதாயின் முதலில் தேசிய இனப் பிரச்சினைக்கும் இணக்கமான ஒரு தீர்வு காணப்பட வேண்டும். அத்தகைய சூழலில்தான் பொருளாதார மீட்சியும் சாத்தியமாகும்.

எனவே நமது தாயகத்தில் முதலீடு செய்யும் அதே சமயத்தில், அந்த முதலீடு மூலம் நாடு பொருளாதார மீட்சி பெறக்கூடிய சூழமைவை உருவாக்குவதற்காக உங்கள் நாட்டு அரசுகள் மூலம் இங்கு தேசிய இனப் பிரச்சினைக்கு இணக்கமான – நியாய – தீர்வு கிட்டுவதற்கான அழுத்தத்தையும் நீங்கள் கொடுக்க வேண்டும்.

வெளிநாட்டு முதலீட்டுக்கும் தேசிய இனப் பிரச்சினைத் தீர்வுக்கும் உள்ள பிரிக்க முடியாத இணைப்பைப் புரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் முதலீடுகளை நீங்கள் முன்னெடுக்க வேண்டும்” என்று சாரப்பட சம்பந்தன் இந்தச் சந்திப்பில் கருத்துரைத்தார் என்று அறியமுடிந்தது.

Leave A Reply

Your email address will not be published.