போதையைக் கட்டுப்படுத்த வீதிக்கு வருகிறது இராணுவம்!

யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்றிலிருந்து இராணுவத்தினரால் முக்கியமான இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வீதியால் பயணிப்போர் சோதனையிடப்படவுள்ளனர் என்று யாழ்ப்பாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து விற்பனை இடம்பெறுகின்றது.

இது தொடர்பில் நீதி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரால் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் அண்மையில் இடம்பெற்றிருந்தது.

வடக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய இன்று முதல் யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களில் இராணுவத்தினரால் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உயிர்கொல்லி போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்படுத்துவோர் கைது செய்யப்பட உள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

மேலும் உயிர்கொல்லி போதைப்பொருள் விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள இராணுவ முகாமில் தெரிவித்தால், குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படவுள்ள சோதனை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.