அரசியல் தீர்வு தொடர்பில் வெட்டிப்பேச்சு வேண்டாம்; செயலில் இறங்குங்கள்!

“அண்மையில் அரச தலைவர்கள் புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும் அதனூடாக தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாகவும் நாட்டின் பல பாகங்களிலும் குறிப்பாக வடக்கு மாகாண விஜயங்களின்போது பேசி வருகின்றனர்.

அவர்கள் உண்மையில் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விருப்பமுடையவர்களாக இருக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது?” – என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளமையுடன், நாட்டை இன்றைய நிலையிலிருந்து முன்னோக்கி நகர்த்த வேண்டுமாக இருந்தால், தென்னிலங்கை அரசியல் சமூகம் இதய சுத்தியுடன் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வரவேண்டும் என்றும் கோரியுள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவும் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்திருந்த நிலையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:-

“புதியதோர் அரசமைப்பு தொடர்பாக பிரதமர், ஜனாதிபதி மற்றும் பல்வேறுபட்ட அமைச்சர்களும் பல்வேறுபட்ட கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

அண்மையில் யாழ்ப்பாணம் விஜயம் செய்த நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ, ‘புதிய அரசமைப்பின் ஊடாக, அரசியல் தீர்வே தமிழ் மக்களின் பிரதான எதிர்பார்ப்பு. அதை நாம் நிறைவேற்றியே தீருவோம்’ என்று கூறியமையுடன், எம்மைச் சந்திக்கும் சர்வதேசப் பிரதிநிதிகளும் புதிய அரசமைப்புத் தொடர்பிலும் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் முக்கியத்துவம் கொடுத்துக் கலந்துரையாடி வருகின்றனர். எனவே ‘இந்த விடயத்தில் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்’ என்றும் மேலும், ‘ஒருவருடத்திற்குள் தீர்வுக்கான அனைத்துப் பணிகளும் நிறைவுக்கு வரவேண்டும்’ என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் தெரிவித்துள்ளார் என்றும் கூறியிருக்கின்றார்.

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக பல்வேறுபட்ட தீர்வுத் திட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. செல்வநாயகம் காலத்தில், பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் என இரு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அவை ஒருதலைப்பட்சமாகவே சிங்கள அரசியல் தலைமைகளினால் கிழித்தெறியப்பட்டன. பின்னர் 1972ஆம் ஆண்டு குடியரசு அரசமைப்பு உருவாக்கப்பட்டபொழுது, தமிழரசுக் கட்சியினால் இனப்பிரச்சினைத் தீர்விற்கான ஆறு அம்சக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்பொழுது அந்த யாப்பை வடிவமைத்தவர்கள் அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்வரவில்லை. இதன் பின்னர், தமிழ் மக்கள் தமக்கு மாற்றுவழி ஏதும் இல்லை என்ற அடிப்படையில் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து போராட ஆரம்பித்தனர்.

ஏறத்தாழ முப்பதாண்டு காலம் நீடித்த இந்த ஆயுதப் போராட்டத்தில் பல இலட்சம் தமிழர்களின் உயிர்கள் இழக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். எம்மக்களின் பல்லாயிரம் கோடிக்கணக்கான சொத்துகள் அழிக்கப்பட்டன. ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டு இப்பொழுது பதின்மூன்று ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் இன்னமும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படவில்லை.

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக ஒவ்வொரு ஜனாதிபதியும் சில முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் காலத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அவரே அந்த ஒப்பந்தத்திற்கு எதிராகப் பின்னர் செயற்பட்டார் என்பதுடன், இன்றுவரை பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்பத்தப்படவில்லை.

ஜனாதிபதி பிரேமதாஸ அவர்கள் வட்டமேசை மகாநாடுகளை நடத்தினார். விடுதலைப்புலிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில் மங்கள முனசிங்க தலைமையில் ஒரு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்தார். அவர்களும் தீர்வுக்கான ஓர் அறிக்கையை தயார்செய்து கொடுத்தார்கள். அந்த அறிக்கை பின்னர் கிடப்பில் போடப்பட்டது.

சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக இருந்த வேளையில், 95ஆம் ஆண்டிலிருந்து 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு தீர்வுத்திட்டம் உருவாக்கப்பட்டது. அதனை இன்றைய ஜனாதிபதியும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தீக்கிரையாக்கியமையுடன் அந்தத் தீர்வுத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.

மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் ஒரு சர்வ கட்சிக்குழு அமைக்கப்பட்டது. அவர்கள் வழங்கிய அறிக்கையும் ராஜபக்‌ஷவினரால் கிடப்பில் போடப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வற்புறுத்தலின் காரணமாக, மஹிந்த அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பதினெட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

அரசு ஆக்கபூர்வமான பேச்சுகளை நடத்தத் தயாராக இல்லாததன் காரணத்தால் அந்தப் பேச்சுகளும் கைவிடப்பட்டன.

இப்பொழுது நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைந்த நிலையில் இருக்கின்றது. உலகம் முழுக்க வாங்கிய கடன்களை மீளச்செலுத்த முடியாதுள்ளதாக அரசே அறிவித்துள்ளது.

இந்தச் சூழலில் மேற்கொண்டு கடன்களைக் கொடுப்பதற்கும் புதிய முதலீடுகளை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கும் உலக நாடுகள் எதுவும் தயாராக இல்லை.

இந்நிலையில், அரசைச் சந்திக்கும் சர்வதேச அமைப்புகள், அது உலக வங்கியாக இருக்கலாம், சர்வதேச நாணய நிதியமாக இருக்கலாம், கடன் வழங்கும் நாடுகளாக இருக்கலாம், அவர்கள் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முக்கியத்துவப்படுத்துகின்றார்கள். ஆகவே தேசிய இனப்பிரச்சினை தொடர்பில், சர்வதேச சமூகத்திற்கு ஒரு பதில் அளிக்க வேண்டிய கடப்பாட்டில் அரசு உள்ளது. அதற்காகவே ஜனாதிபதி தொடக்கம் அமைச்சர்கள் வரை, புதிய அரசியல் சாசனம் குறித்து இப்பொழுது பேச ஆரம்பித்திருக்கின்றார்கள்.

பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பு, தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒரு சமஷ்டி அரசமைப்பு முறை வேண்டும் என்பதை ஏகோபித்த ரீதியில் இலங்கை அரசாங்கத்திற்குக் கையளித்திருக்கின்றது. ஆகவே, விஜயதாஸ ராஜபக்‌ஷ கூறுவது போன்று தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஒருவருட கால அவகாசம் தேவையில்லை.

தேவையான அனைத்து வரைவுகளும் அரசின் வசம் இருக்கின்றன. ஆகவே, குறிக்கப்பட்ட ஒருசில வாரத்துக்குள்ளேயே பேச்சுகளை முடிக்க முடியும். ஆனால் அரசு அதற்குத் தயாராக இருக்கின்றதா என்பதுதான் கேள்வி.

ஒருமுறை, இருமுறை அல்ல. ஒவ்வொரு ஜனாதிபதியாலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். இப்பொழுதும் வங்குரோத்து அடைந்த பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்காக மீண்டும் ஒருமுறை புதிய அரசியல் சாசனம் என்று நாடகம் ஆடுகிறார்களா என்ற கேள்வி எம்முள் எழுகின்றது.

இலங்கை பலமொழிகளைப் பேசுகின்ற, பல மதங்களையும், பல கலாசாரங்களையும் பின்பற்றுகின்ற மக்களைக் கொண்ட ஒரு நாடாகும். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இருதரப்பினராலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அவ்வாறான ஒரு நாட்டில் தமிழ்த் தேசிய இனமும் ஏனைய சிறுபான்மை இனங்களும் மாறிமாறி வந்த அரசுகளின் அடக்குமுறைக்கு உள்ளாகி வந்திருக்கின்றன.

அந்த அடக்குமுறையின் வடிவங்கள் இன்னமும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இவ்வாறான சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பின் ஊடாகத் தீர்வு காணப்படவேண்டுமாயின், அரசியல் யாப்பு உருவாக்கத்தில் சர்வதேச அரசியல் சாசன வல்லுனர்களின் பங்களிப்பும் – குறிப்பாக இந்திய அரசியல் சாசன நிபுணர்களின் பங்களிப்பும் – இடம்பெற வேண்டும்.

ஆகவே, ஒரு வருடம், ஆறுமாதம், மூன்றுமாதம், நூறுநாள் என்று வெட்டிப்பேச்சு பேசுவதை விடுத்து, விரைவானதும் ஆக்கபூர்வமானதுமான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.