பயிற்சியின் போது ரோஹித் சர்மாவுக்கு காயம்; இந்திய அணிக்கு சிக்கல்!

டி20 உலகக்கோப்பை தொடரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயமடைந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.குரூப் ஏ பிரிவில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அதேபோல், குரூப் பி பிரிவில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.

வரும் 9ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் அரையிறுதியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும், 10ஆம் தேதி அடிலெய்டில் நடைபெறவுள்ள அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகளும் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணிகள் 13ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்கும்.

இந்திய அணி கடந்த 2013ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றப் பிறகு ஒருமுறைகூட ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. தற்போது டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிவரை முன்னேறியுள்ளனர்.

மேலும், அணியில் இருக்க கூடிய பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வருவதால், இம்முறை இந்திய அணி கோப்பை வெல்ல வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது.

கோப்பை வெல்ல இந்திய அணியின் தற்போது தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், இன்று நடைபெற்ற பயிற்சியின்போது ரோஹித் சர்மாவின் வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, காலைப்பிடித்து கொண்டு ரோஹித் சர்மா அப்படியே அமர்ந்தார்.

மருத்துவர்கள் விரைந்து வந்து ரோஹித் சர்மாவை சோதித்து பார்த்தார்கள். இதனைத் தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பிறகு மீண்டும் ரோஹித் பயிற்சிக்கு திரும்பினார்.

ரோஹித் சர்மாவின் காயத்தின் தன்மை குறித்து இன்னமும் அறிக்கை வெளிவரவில்லை. மேலும், அவர் நீண்ட நேரத்திற்கு பிறகு பயிற்சிக்கு திரும்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இன்று மாலை வெளியாகும் மருத்துவ அறிக்கைக்கு பிறகுதான் ரோஹித் சர்மா, அரையிறுதியில் விளையாடுவாரா, மாட்டாரா என்பது குறித்து தெரிய வரும்.

Leave A Reply

Your email address will not be published.