பெண்கள் மது குடிக்கும் பழக்கம் 37 சதவீதம் உயர்வு.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் மது குடிக்கும் பழக்கம் சமீப காலமாக வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெருநகரங்களில் பாலின வேறுபாடுகள் இன்றி மது அருந்தும் பழக்கம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் மது அருந்தும் பழக்கம் குறித்து Community against Drunken Driving (CADD)என்ற தனியார் தொண்டு அமைப்பு ஆய்வு நடத்தியுள்ளது. அதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கோவிட் காலத்திற்குப் பின் டெல்லியில் வசிக்கும் 37.6 சதவீதம் பெண்கள் தங்களிடம் மது அருந்தும் பழக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதில் சுமார் 45 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் தங்களின் மன அழுத்தம் காரணமாகவே மது பழக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.மது அதிகளவில் கிடைப்பதால் மது குடிப்பதை அதிகரித்துள்ளதாக 34.4 சதவீதம் பெண்கள் தெரிவித்துள்ளனர். போர் அடிப்பதால் மது குடிப்பதை அதிகரித்துள்ளதாக 30.1 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர்.டெல்லியில் மதுபானம் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், சிறப்புத் தள்ளுபடி விற்பனை, டோர் டெலிவரி போன்ற சலுகைகள் மது பழக்கத்தை தூண்டியதாக 77 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெண்கள் மது அருந்து எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. பெண்கள் மட்டுமின்றி ஆண்களிடமும் மது அருந்தும் பழக்கம் அதிகரித்துள்ளதால், மாநிலத்தில் ஒட்டுமொத்த மது விற்பனை 87 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.