காணிக்காகப் போராட தமிழர்கள் போல் முஸ்லிம்கள் இணைய வேண்டும்! – ஹசன் அலி கோரிக்கை.

“முஸ்லிம்களாகிய நாங்கள் கிட்டத்தட்ட 62 ஆயிரம் ஏக்கர் காணிகளை இழந்து இருக்கின்றோம். ஆனால், தமிழ் மக்கள் வடக்கு மற்றும் மட்டக்களப்பில் ஏதாவது காணி பிரச்சினை வந்தால் அதற்காக எல்லோருமே ஒற்றுமையாகப் போராடி நிறைய விடங்களைச் சாதித்திருக்கின்றார்கள்.”

இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றும்கூட தமிழ் மக்களின் பிரதேசங்களில் காணிகள் கையகப்படும் சந்தர்ப்பங்கள் இருந்து வருகின்ற நிலையில் அதற்குக் காரணமானவர்களை ஒன்றுகூடி அவர்கள் விரட்டியடிக்கின்றார்கள். ஆனால், அம்மக்களிடம் இருக்கின்ற ஒற்றுமை எங்களிடத்தில இல்லை.

எமது ஊர்கள் யாவும் தற்போது ஒரு தனியான தீவுகளாக மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறான பிரதேசவாதங்களால் தான் வெளியூர் தலைவர்கள் எனக் கூறப்படுபவர்கள் இங்கு வந்து எமக்கு மேல் நின்று கொண்டு எங்கள் பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்கள் வித்தியாசமான அரசியலைச் செய்கின்றார்கள்.

இதற்குப் பிரதான காரணம் பிரதேசவாதமாகும். எனவேதான் ஒவ்வொரு கிராமமும் தனித்தனியாகச் சிந்திப்பதைத் தவிர்க்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.