உப்புச் சப்பில்லாத பயனற்ற ‘பட்ஜட்’! – ரணிலின் உரை குறித்து சுமந்திரன் காட்டம்.

“இது உப்புச் சப்பில்லாத – உருப்படியற்ற பட்ஜட். ஒரு செலவு விவரமும் இல்லை. ஆக வழமை போல் வரவு இவ்வளவு, செலவு இவ்வளவு என்று ஏதோ காட்டி இருக்கின்றார்கள். அவ்வளவுதான். பொருளாதார நெருக்கடியில் மூழ்கிக் கிடக்கும் நாட்டை அதிலிருந்து மீட்பதற்கான எந்த உருப்படியான திட்டமோ, யோசனையோ அதில் இல்லை.”

இவ்வாறு நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு –
செலவுத் திட்டத்தை மிகக் காட்டமாக விமர்சித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஆக, பாதுகாப்புச் செலவு மட்டும் அதிகளவில் உயர்ந்திருக்கின்றது. கடந்த தடவை வரவு – செலவு திட்டத்திலும் பாதுகாப்புக்குப் பெருமளவு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

பின்னர் கடந்த ஏப்ரலில் செய்யப்பட்ட இடைக்கால ஒதுக்கீட்டிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி மேலும் அதிகரிக்கப்பட்டது.

இப்போது அந்த இரண்டையும் விட அதிகமான ஒதுக்கீடு அந்த அமைச்சுக்குச் செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் மூழ்கிக் கிடக்கும் நாட்டை மீட்பதற்குச் செலவினத்தைக் குறைக்கும் ஏற்பாடு ஏதுமில்லை. மாறாக இப்படி அது உயர்த்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து இந்த பட்ஜட்டில் எதுவும் இல்லை.

எதையுமே – எந்தத் திசையையுமே காட்டாத ஒரு பட்ஜட் இது.

ஆனால், பட்ஜட் உரையில் பொதுவில் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று அதிகம் விவரித்திருக்கின்றார் ஜனாதிபதி. அதைவிட எதுவும் இல்லை. அதில் இலக்க எண்ணிக்கையில் பார்த்தால் அங்கு ஒன்றுமில்லை என்பது தெளிவாகும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.