எமக்கு அதிகாரம் கிடைத்தால் ரணிலும் மஹிந்தவும் சிறைக்குள்! – அநுர சூளுரை.
“ஊழல்வாதிகள் ஒருபோதும் இன்னோர் ஊழல்வாதிக்குத் தண்டனை வழங்கமாட்டார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இந்நாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தண்டனை வழங்கமாட்டார். அதேபோல் ரணிலுக்கு மஹிந்த தண்டனை வழங்கமாட்டார். எங்களுக்கு அதிகாரத்தை வழங்கினால் ஊழல்வாதிகள் அனைவரையும் சிறைக்குள் தள்ளுவோம்.”
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
‘நீங்கள் ஊழல்வாதிகளின் பயில்களை வைத்துள்ளீர்கள். ஆனால், ஊழல்வாதிகள் இதற்கு அஞ்சுவதாக இல்லை. அந்தப் பயிலில் எங்களது பெயர்கள் இருப்பது உண்மை. ஆனால், உள்ளே விடயம் ஒன்றும் இல்லை என்கிறார்கள் ‘மொட்டு’க் கட்சி எம்பிக்கள். இது உண்மையா?’ என்று கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அநுரகுமார,
“ஆம் அவர்கள் அஞ்சமாட்டார்கள். இந்த ஊழல்வாதிகள் எந்த அரசு வந்தாலும் அந்த அரசில் போய் ஒட்டிக்கொள்வார்கள். இதனால் அவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கின்றது. தொடர்ந்து அவர்களது வேலையைச் செய்கின்றார்கள். இவர்கள் தண்டிக்கப்படுவதில்லை .மக்கள்தான் இந்த ஊழல்வாதிகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.
ஊழல்வாதிகள் ஒருபோதும் இன்னோர் ஊழல்வாதிக்குத் தண்டனை வழங்கமாட்டார்கள். மஹிந்தவுக்கு ரணில் தண்டனை வழங்கமாட்டார். ரணிலுக்கு மஹிந்த தண்டனை வழங்கமாட்டார். இந்த விடயத்தில் நாம் எமது பொறுப்பை நிறைவேற்றி இருக்கினறோம்.
ஊழல்வாதிகளுக்கு ஊழல் புரிவதற்காக வாக்களித்து விட்டு ஏன் திருடர்களைப் பிடிக்கவில்லை என்று மக்கள் எங்களிடம் கேட்பது நியாயமா? எங்களுக்கு அதிகாரத்தை வழங்கினால் திருடர்கள் அனைவரும் உள்ளே.
இவர்களுக்குத் தண்டனை கிடைக்குது என்றால் அது எங்களது அரசால் மட்டுமே முடியும். அதுவரை எதுவும் நடக்காது. இவர்கள் திருடிக்கொண்டே இருப்பார்கள்.
இந்த ஊழல்வாதிகளின் மத்தியில் அரசியல்வாதிகள், ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள், வியாபாரிகள், அரச அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் உள்ளனர்.
சஜித் பிரேமதாஸ ஊழல்வாதிகள் பற்றி பேசுகின்றார். அவரது மேடையில் இருக்கின்ற பாதிப்பேர் ஊழல்வாதிகள். அவரால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்?
குழந்தைகளுக்கு பால்மா கிடைக்காமல் போனதும் – நாடு கடனில் சிக்கி இருப்பதும் – தொழில்சாலைகள் மூடப்பட்டுக்கொண்டு செல்வதும் – மக்களால் மூன்று நேரம் சாப்பிட முடியாமல் இருப்பதும் – மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதும் இந்த ஊழலால்தான்.
ராஜபக்ச குடும்பம் ஊழல்வாதிகள் என்று நாம் அன்றே சொன்னோம். இன்று அவர்கள் திருடர்கள்தான் என்று முழு நாடும் சொல்கின்றது.
எனது கையில் பல ஊழல்வாதிகளின் பயில்கள் உள்ளன. எங்களுக்கு அதிகாரத்தை வழங்கினால் அவர்கள் அனைவரையும் சிறைக்குள் தள்ளுவோம்” – என்றார்.