அச்சுவேலியில் அதிகாலை கடை உரிமையாளர் மீது இனந்தெரியாத கும்பல் கொலைவெறித் தாக்குதல்!

யாழ். அச்சுவேலியில் இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலில் கடை உரிமையாளர் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
கடை உரிமையாளர் இன்று அதிகாலை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை வீதியூடாக தனது கடையைத் திறப்பதற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற வேளை இடைவழியில் மறித்த இனந்தெரியாத கும்பல், அவர் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தியது.
அந்த வீதியில் கார் ஒன்றில் காத்திருந்த இனந்தெரியாதோர் கடைக்குச் சென்றவரை இடையில் வழிமறித்துப் பொல்லுகளால் தலை, கை என்பவற்றில் கடுமையாகத் தாக்குதல் நடத்தினர்.
தாக்குதல் நடத்திய இருவர் தம்மை அடையாளம் காணாதவாறு முகத்தைத் துணியால் கட்டி மறைத்திருந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக உணவகமொன்றை நடத்தி வரும் சின்னையா ஆலாலசுந்தரம் (வயது 54) என்பவரே தாக்குதலில் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
மேற்படி நபர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.